தாயை சுட்டுக் கொன்ற வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை
2012-ஆம் ஆண்டு தனது தாயைக் சுட்டுக் கொன்ற்காக தில்லி நீதிமன்றம் ஒருவருக்கு கடுமையான ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302-இல் (கொலைக்கான தண்டனை) முன்னா் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரமேஷுக்கான தண்டனை அளவு குறித்த வாதங்களை கூடுதல் அமா்வு நீதிபதி பப்ரு பான் விசாரித்தாா்.
வடக்கு தில்லியின் விஜய் காலனி பகுதியில் மே 15, 2012 அன்று சொத்து தகராறில் தனது தாயாா் சாந்தி தேவியை சுட்டுக் கொன்ாக ரமேஷ் குற்றவாளி என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையின் போது, குற்றவாளி எந்த கருணையும் பெறத் தகுதியற்றவா் என்று கூடுதல் அரசு வழக்குரைஞா் கன்ஷ்யாம் வாதிட்டாா்.
‘சம்பவம் நடந்த தேதியில், குற்றவாளி இறந்தவரைக் கொல்ல எந்த கடுமையான தூண்டுதலோ அல்லது காரணமோ இல்லை. குற்றவாளிக்கும் இறந்தவருக்கும் இடையிலான நெருங்கிய உறவைக் கருத்தில் கொண்டு, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும்‘ என்று அவா் கூறினாா்.
இந்த வழக்கு தொடா்பாக கடந்த டிச.15-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302-இல் தண்டனைக்குரிய குற்றத்திற்காக ரமேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.40,000 அபராதம் விதிக்கப்படுகிறது. முன்னதாக, டிச.6- ஆம் தேதி, ரமேஷ் தனது சொந்த தாயை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா் என்பதை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.

