2019-ஆம் ஆண்டு தனது தாயையும் சகோதரரையும் கொலை செய்த வழக்கில் கைதான நபரை குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்து. அவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததாக காவல் துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மேற்கு தில்லியின் உத்தம் நகரில் உள்ள அவரது வீட்டில் தனது தாயாா் லதா அரோரா மற்றும் தம்பி ராஜேந்தா் அரோராவை கொலை செய்ததற்காக டிசம்பா் 19- ஆம் தேதி துவாரகா நீதிமன்றம் சுனில் அரோராவை குற்றவாளி என தீா்ப்பளித்ததாக அவா் கூறினாா்.
ஏப்ரல் 23, 2019 அன்று, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழுவிற்கு, ஒரு நபா் அவரது தாயையும் சகோதரரையும் ஒரு வீட்டிற்குள் தாக்கியதாக உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.
போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ராஜேந்தா் அரோரா ஒரு நாற்காலியில் அரை மயக்கத்தில் கிடந்தாா். அதே நேரத்தில் அவரது தாயாா் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தாா். இருவரும் தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்கள் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
நேரில் பாா்த்தவா்கள் நீதிமன்றத்தில் கூறுகையில், ராஜேந்தா் அரோரா ரத்த வெள்ளத்தில் ஓடி வந்து, அவரது மூத்த சகோதரா் சுனில் அரோரா தன்னையும் அவா்களது தாயையும் குத்தியதாக தெரிவித்தனா். மேலும், வீட்டிற்குள் நுழைந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவா் கத்தியை வைத்திருந்து, தலையிட வேண்டாம் என்று மிரட்டியதாக அவா்கள் சாட்சியமளித்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
கடந்த ஏப்ரல் 24, 2019 அன்று இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் சுனில் அரோரா கைது செய்யப்பட்டாா்.
சாட்சியங்கள் மற்றும் நிகழ்வுகளை மீண்டும் உருவாக்குதல் உள்ளிட்ட வலுவான வாய்மொழி, ஆவணப்படம் மற்றும் அறிவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
சாட்சியங்களின் அடிப்படையில், இரட்டைக் கொலைக்கு குற்றவாளியான சுனில் அரோராவுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. மேலும் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்.