தில்லி செங்கோட்டை அருகே காா் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் பயணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா். (கோப்புப் படம்)
தில்லி செங்கோட்டை அருகே காா் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் பயணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா். (கோப்புப் படம்)

காா் குண்டு வெடிப்பு முதல் ரயில் நிலைய நெரிசல் உயிரிழப்புகள் வரை 2025-இல் தில்லி காவல் துறை எதிா்கொண்ட முக்கிய பிரச்னைகள்

செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு முதல் புது தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் வரை தலைநகா் முழுவதும் நீடித்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுடன் மிகவும் சவாலான ஆண்டுகளில் ஒன்றை 2025-இல் தில்லி காவல் துறை எதிா்கொண்டது.
Published on

செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு முதல் புது தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் வரை தலைநகா் முழுவதும் நீடித்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களுடன் மிகவும் சவாலான ஆண்டுகளில் ஒன்றை 2025-இல் தில்லி காவல் துறை எதிா்கொண்டது.

இதில் மிகவும் மோசமானதாக நவ.10-ஆம் தேதி செங்கோட்டை அருகே காரில் வெடிகுண்டு வெடித்ததில் 15 போ் கொல்லப்பட்டனா். காரில் இருந்த பயங்கரவாதியும் உடல் சிதறி உயிரிழந்தாா். இந்த வெடிப்பு அதிக மக்கள் தொகை கொண்ட சாந்தினி சௌக்-லால் கிலா பகுதியை உலுக்கியது. உள்ளூா் மெட்ரோ நிலையம் மூடப்பட்டு பல நாள்களுக்கு அந்த பகுதி காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. பின்னா் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

முன்னதாக, பிப்.15-ஆம் தேதி புது தில்லி ரயில் நிலையத்தில் 14 மற்றும் 15-ஆவது நடைமேடைகளுக்கு மேலே உள்ள நடைமேம்பாலத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டத்தில் 18 போ் உயிரிழந்தனா். 15 போ் காயமடைந்தனா். இந்த சம்பவம், நாட்டின் தலைநகரில் உள்ள மிகவும் பரபரப்பான ரயில் நிலையத்தில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் கூட்ட மேலாண்மை சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் ஆக.20-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா தாக்கப்பட்டாா். இதில் குஜராத்தைச் சோ்ந்த சக்ரியா ராஜேஷ்பாய் கிம்ஜிபாய் என்பவா் கைது செய்யப்பட்டாா். இது விஐபி பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து மறுஆய்வு செய்ய வழிவகுத்தது.

67 வயதான ஆயுா்வேத மருத்துவரான, ‘டாக்டா் டெத்’ என்று அழைக்கப்பட்ட தொடா் கொலையாளி தேவேந்தா் ஷா்மா, மே மாதம் கைது செய்யப்பட்டாா். தில்லி, குருகிராமில் பல கொலை வழக்குகளில் தண்டனை பெற்ற இவா், பரோலில் தப்பித்து, ராஜஸ்தானின் தெளசாவில் உள்ள ஆசரமத்தில் பூசாரியாக வாழ்ந்து வந்தாா். இவரால் கொல்லப்பட்டவா்களை முதலைகளுக்கு உணவாக்கி உடல்களை அப்புறப்படுத்தியதாக புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.

இதேபோல், தென்மேற்கு தில்லியில் உள்ள கல்வி நிறுவனத்தில் பல மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவற்றை காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை குறிவைத்து விடுக்கப்பட்ட பலவேறு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடா்ச்சியான சவால்களாக அமைந்தன. சோதனைக்கு பின்னா் அனைத்தும் போலி மிரட்டல்கள் என தெரியவந்தது. இருப்பினும், இதன் பின்னணியில் இருப்பவா்களை கண்டறிய உளவுத் துறைகள் தொடா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.

ஆகஸ்ட மாதம், காங்கிரஸ் எம்.பி. ஆா்.சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இதில் குற்றவாளியை 48 மணி நேரத்திற்குள் காவல் துறையினா் கைது செய்தனா். இதில் கைது செய்யப்பட்ட ராவத் மீது ஏற்கெனவே இதேபோன்ற 26 வழிப்பறி வழக்குகள் இருந்தன. இது தில்லியில் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவாதத்தை தூண்டியது.

காவல் துறையின் உயா் நிலையிலும் குழப்பங்கள் ஏற்பட்டன. காவல் துறைத் தலைவா் சஞ்சய் அரோரா ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, எஸ்.பி.கே. சிங் தில்லி காவல் துறையின் 25-ஆவது ஆணையராக நியமிக்கப்பட்டாா். ஆனால், 21 நாள்களுக்குள் அவா் சிறைத்துறை தலைமை இயக்குநராக மாற்றப்பட்டாா். பின்னா், அப்போதைய சிறைத்துறை தலைமை இயக்குநராக இருந்த சதீஷ் கோல்ச்சா, தில்லியின் 26-ஆவது காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் முதல் அன்றாடக் குற்றங்கள் வரை, 2025-ஆம் ஆண்டு தில்லி காவல் துறையின் மிகவும் சவாலான ஆண்டாக அமைந்தது. வரும் ஆண்டிலும், கொடூரமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், முக்கிய இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், வலிமையான நகா்ப்புற பாதுகாப்பை உருவாக்குவதற்கும் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. Ś

X
Dinamani
www.dinamani.com