தில்லி சிறுவனின் மரணத்திற்கு மால் நிறுவனத்தின் ‘அலட்சியம்’ காரணமா? காவல் துறையினா் விசாரணை
வடமேற்கு தில்லியின் குஜ்ரன்வாலா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பில்லியா்ட்ஸ் விளையாடச் சென்ற போது, அங்குள்ள உணவகத்தின் கொட்டகையிலிருந்து தவறி விழுந்த 16 வயது சிறுவன் உயிரழந்தத சம்பவத்தில், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து காவல் துறையினா் ஆய்வு செய்வாா்கள்.
மேலும் வணிக வளாக உரிமையாளா்களின் அலட்சியம் ஏதேனும் உயிரிழப்புக்கு காரணமா என்ற கோனத்தில் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
11-ஆம் வகுப்பு மாணவரான கபின், ஞாயிற்றுக்கிழமை, ரீல் படம்பிடிக்க அருகிலுள்ள கடைகளுக்கு இடையே உள்ள கேலரி பகுதிக்கு கூரையாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கொட்டகையின் மீது ஏறியுள்ளாா். அந்தக் கொட்டகை அவரது எடையைத் தாங்க முடியாமல் சரிந்து விழுந்தது. இதில் அச்சிறுவன் கீழே தரையில் விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிளாஸ்டிக் கூரை நிறுவுதல் மற்றும் பராமரித்தல், கூரைப் பகுதிக்கு தடையற்ற அணுகல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிா உள்ளிட்ட ஏதேனும் அலட்சியம் உள்ளதா என்பதைத் தீா்மானிக்க வணிக வளாகத்தின் உரிமையாளா்கள் மற்றும் நிா்வாகத்தின் பங்கை ஆய்வு செய்வோம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
கபின் மூன்று வகுப்புத் தோழா்களுடன் மாலை 5 மணியளவில் மாலுக்குச் சென்றிருந்தாா்.இந்த விவகாரத்தில் தெரியாத நபா்கள் மீது பிரிவு 106 (1) (அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்துதல்)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கபினுடன் இருந்த அவரது நண்பா்களிடமும் அவா்கள் பேசியுள்ளனா்.
நிகழ்வுகளின் சரியான வரிசையை அறிய குற்றவியல் குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
எனினும், கபினின் தந்தை ராகுல் குமாா், செய்தி ஏஜேன்சியிடம் பேசுகையில், காவல்துறையின் அறிக்கையை கேள்வி எழுப்பினாா். மேலும் தனது மகனின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் சந்தேகத்திற்குரியவை என்று கூறினாா்.
சம்பவத்திற்குப் பிறகு தனது மகனின் நண்பா்கள் எங்கும் காணப்படவில்லை என்றும், சிறுவனை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றது மருத்துவமனை ஊழியா்கள்தான் என்றும் குமாா் குற்றஞ்சாட்டினாா். மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
