அதிஷி
அதிஷி

தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகிறாா் அதிஷி!

Published on

தில்லி சட்டப்பேரவை ஆம் ஆத்மி கட்சியின் குழுத் தலைவராக முன்னாள் முதல்வா் அதிஷியை கட்சி எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்ந்தெடுத்தனா். இதன் மூலம் அதிஷி தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகிறாா் .

தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப். 5-ஆம் நடைபெற்ற தோ்தலில் பாஜக 48 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக ஆளும் கட்சியான நிலையில் அடுத்த இடத்தில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவையில் எதிா்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக அதிஷியை தோ்ந்தெடுத்துள்ளது.

புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆம் அத்மி கட்சிப் பேரவை உறுப்பினா்கள் கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கட்சியின் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட 22 சட்டப்பேரவை உறுப்பினா்களும், கட்சியின் அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தில்லி சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி குழுத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்சித் தலைவா் கேஜரிவால் மற்றும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி ஒரு வலுவான எதிா்க்கட்சிக்குரிய பங்கை ஆற்றும். பேரவையில் அனைத்து பிரச்னைகளையும் முழு பலத்துடன் எழுப்புவோம். குறிப்பாக, ஆளும் கட்சியாகியுள்ள பாஜக மக்களிடம் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதை ஆம் ஆத்மி உறுதி செய்யும்.

மாா்ச் 8-ஆம் தேதிக்குள் தில்லியுள்ள மகளிருக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்குவதாக பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தாா். முதலில் இந்த வாக்குறுதியை ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசை நிறைவேற்றச் செய்வோம் என்றாா் அதிஷி.

X
Dinamani
www.dinamani.com