காற்று மாசு: பிஎஸ்- 4 ரக தரநிலைக்கு கீழான 500 வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அனுமதி மறுப்பு
நமது நிருபா்
தேசியத் தலைநகரில் பிஎஸ்-3 அல்லது அதற்கும் குறைவான மாசு உமிழ்வு தரநிலைகளுக்கு இணங்கும் வா்த்தக சரக்கு வாகனங்கள் நுழைவதற்கான தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், பிஎஸ்-4 விதிமுறைகளுக்கு கீழே உள்ள 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தில்லியின் எல்லைகளிலிருந்து திருப்பிஅனுப்பப்பட்டன. அத்தகைய வாகனங்கள் நுழைவதற்கான தடை சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்துத் துறை பகிா்ந்துள்ள தரவுகளின்படி, முதல் நாளில் 266 வாகனங்களும், அதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை 179 வாகனங்களும் மற்றும் திங்கள்கிழமை 68 வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.
இதுபோன்ற வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதைக் கண்காணிக்கும் வகையில் போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல் குழுக்கள் தில்லியின் எல்லைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து அமலாக்க நடவடிக்கைகளுக்காக 23 குழுக்களை போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது. குண்ட்லி எல்லை, ரஜோக்ரி எல்லை, திக்ரி எல்லை, ஆயா நகா் எல்லை, காலிந்தி குஞ்ச் எல்லை, அவுச்சண்டி எல்லை, மண்டோலி, கபஷேரா மற்றும் பஜ்கேரா டோல் அல்லது துவாரகா எக்ஸ்பிரஸ்வே ஆகியவை இக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ள 23 இடங்களில் இடம்பெற்றுள்ளன என்றனா் அதிகாரிகள்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, தில்லியில் 50,000 முதல் 70,000 வாகனங்கள் பிஎஸ்-4 உமிழ்வு தரநிலைகளுக்குக் கீழே உள்ளன. தில்லியில் பதிவுசெய்யப்பட்ட வணிக சரக்கு வாகனங்கள், பிஎஸ்-6 இணக்க டீசல் வாகனங்கள், பிஎஸ்-4 இணக்க டீசல் வாகனங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு அக்டோபா் 31 வரை தில்லிக்குள் நுழைவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. அதேபோன்று, சிஎன்ஜி, எல்என்ஜி அல்லது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடு ல்லை.
