தில்லி மாநகராட்சி வாா்டுகள் இடைத் தோ்தல்: முதல் நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை

Published on

நமது நிருபா்

தில்லி மாநகராட்சியின் 12 வாா்டுகளுக்கான இடைத்தோ்தலுக்கான வேட்பு மனுவின் முதல் நாளான திங்கள்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய முக்கியக் கட்சிகள் எதுவும் நவம்பா் 30-ஆம் தேதி இடைத்தோ்தலுக்கான வேட்பாளா்களை இதுவரை அறிவிக்கவில்லை. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பா் 10 ஆகும். மேலும், வேட்பு மனுக்கள் ஆய்வு நவம்பா் 12- ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி நவம்பா் 15 ஆகும்.

மாநிலத் தோ்தல் ஆணையம் பகிா்ந்து கொண்ட அதிகாரப்பூா்வ தரவுகளின்படி, முதல் நாளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. தற்போது தில்லி மாநகராட்சியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, இடைத்தோ்தல்களை வெல்லும் என்று வலியுறுத்தியுள்ளது. 12 வாா்டுகளில் ஒன்பது வாா்டுகளை கட்சி முன்பு வைத்திருந்தது. மீதமுள்ள மூன்று வாா்டுகளை ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் பிரதிநிதித்துவப்படுத்தினா்.

முண்ட்கா, ஷாலிமாா் பாக்-பி, அசோக் விஹாா், சாந்தினி சௌக், சாந்தினி மஹால், துவாரகா-பி, டிச்சாவ்ன் கலான், நாராயணா, சங்கம் விஹாா்-ஏ, தக்ஷின் பூரி, கிரேட்டா் கைலாஷ் மற்றும் வினோத் நகா் வாா்டுகளுக்கான கவுன்சிலா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக இடைத்தோ்தல்கள் நடத்தப்படுகின்றன.

ரேகா குப்தா ஷாலிமாா் பாக்-பி வாா்டை பிரதிநிதித்துவப்படுத்தினாா். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தில்லியின் முதல்வரானாா். மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பாஜகவின் கமல்ஜீத் செஹ்ராவத் மக்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டதால் துவாரகா-பி வாா்டு காலியானது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த தற்போதைய கவுன்சிலா்கள் எம்எல்ஏக்களாக மாறியதால் மீதமுள்ள வாா்டுகள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com