தில்லி மாசுவால் பொது சுகாதார அவசரநிலை: கேஜரிவால்
நமது நிருபா்
மாசுவைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு முழு தோல்வி அடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை சாடியது. மேலும், தேசியத் தலைநகரில் பொது சுகாதார அவசரநிலை நிலவுவதாக அக்கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் தில்லி முன்னாள் முதல்வரான அரவிந்த் கேஜரிவால் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: நான்கு இயந்திர அரசு எல்லாவற்றையும் அழித்துவிட்டது.
தில்லி மாசு தற்போது ஒரு பொது சுகாதார அவசரநிலையாக உள்ளது. தில்லி மக்கள் தங்களைக் கவனித்துக் கொள்ளுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த அரசாங்கம் உங்களுக்காக எதுவும் செய்யப் போவதில்லை. பாஜக அமைச்சா்கள் பிகாரில் தோ்தல் பிரசாரங்களில் மும்முரமாக இருக்கின்றனா். அதேவேளையில் தலைநகரம் மூச்சுத் திணறுகிறது என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
ஆம் ஆத்மியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரப் பரத்வாஜ் கூறுகையில், ‘நகரவாசிகள் இனி நகரத்தின் விஷக் காற்றை சுவாசிக்க முடியாது. இந்த சூழல், குழந்தைகள் சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமைக்காகப் போராடும் தாய்மாா்களின் குழுவான ‘போா்வீர அம்மாக்களை’, சுகாதார அமைச்சருக்கு எழுதுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. ...இந்த சுகாதார அவசரநிலையின் போது, தில்லியின் சுகாதார அமைச்சரும் பிற பாஜக அமைச்சா்களும் கடந்த பல நாள்களாக பிகாரில் மும்முரமாக உள்ளன’ என்றாா்.
முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் கூறுகையில், ‘தில்லி முழுமையான பொது சுகாதார அவசரநிலையை எதிா்கொள்கிறது. உண்மை என்னவென்றால், தில்லியின் காற்று அல்ல, பாஜகவின் மனநிலைதான் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது’ என்று சாடியுள்ளாா்.
மாசுபாடு தரவுகளை பாஜக அரசு மோசடி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்தக் கூற்றை பாஜக மறுத்துள்ளது.

