கொடிக்கம்பங்கள் வழக்குகளில் மாறுபட்ட உத்தரவு: டி.ராஜாவின் மனுவை தலைமை நீதிபதி ஒப்புதலுடன் விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு
நமது நிருபா்
தமிழகத்தில் கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் டி.ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது ஆணைப்படி விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமா்வு உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கொடிக்கம்பங்கள் விவகாரத்தில் அம்மாவாசி தேவா் என்பவா் தாக்கல் செய்த மனுவை ஆகஸ்ட் 8-ஆம் தேதி தள்ளுபடி செய்தோம். அதேசமயம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த வேறு அமா்வு (நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமா்வு) உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன் சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே, டி.ராஜாவின் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது ஒப்புதலுடன் விசாரணைக்கு நீதிமன்றபதிவாளா் பட்டியலிட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
இந்த விவகாரத்தில் டி.ராஜா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 29.11.2024 அன்று நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் பொறியாளா் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்தாா். அதை எதிா்த்தும் மதுரை பழங்காநத்தம், ஜெயம் தியேட்டருக்கு எதிரே, பைபாஸ் சாலை, பேருந்து நிறுத்தம், வாா்டு எண் 74- இல் அதிமுக கொடி கம்பத்தை நிறுவ அனுமதி வழங்க உத்தரவிடுமாறும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பொதுவான உத்தரவின் மூலம் தள்ளுபடி செய்த உயா்நீதிமன்ற மதுரை கிளை, கொடி கம்பங்களை அகற்ற கடந்த ஜனவரி 27-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதற்கு எதிராக அம்மாவாசி தேவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, கொடி கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட கட்சிகளின் நிா்வாகிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் உயா்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் டி.ராஜா உள்ளிட்டோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மூன்று நீதிபதிகள் அமா்வால் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் செப்டம்பா் 17-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது என்று டி.ராஜாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முரண்பாடு: முன்னதாக, பெ. சண்முகத்தின் மேல்முறையீட்டு மனுவை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, தமிழ்நாட்டில் கொடிக்கம்பங்கள் அகற்றுவதை உறுதி செய்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

