மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு அண்ணாமலையை விசாரிக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
நமது நிருபா்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யபட்ட மனுவை செவ்வாய்க்கிழமை (நவ.4) விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சமூக ஆா்வலா், வழக்குரைஞா் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவா் எம்.எல்.ரவி என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது : கடந்த ஆண்டு டிசம்பா் 23-ஆம் தேதி இரவு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவா் தனது நண்பருடன் இருந்தபோது, அத்துமீறி ஒருவா் நுழைந்து, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த நபா் ஜோடியை படம்பிடித்து மிரட்டியதாகவும் மறுதினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவா் கைது செய்யப்பட்டாா். அந்த வழக்கில் விசாரணை தொடங்கும் முன்பே, சென்னை நகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் ஒரு பத்திரிகையாளா் சந்திப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரனைத் தவிர வேறு யாரும் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று கூறினாா்.
இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரித்தது. அதில் ஞானசேகரனை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்து தீா்ப்பளித்தது. ஆனால், சம்பவம் நடந்த சில நாள்களுக்குள்ளாக ஜனவரி 30ஆம் தேதி தமிழக பாஜக தலைவராக அப்போது இருந்த கே. அண்ணாமலை ஒரு பத்திரிகையாளா் சந்திப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் அனைத்து கைபேசி அழைப்புப்பதிவுகளும் தன்னிடம் உள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சாா்’ யாா் என்பது தனக்குத் தெரியும் என்றும் கூறினாா்.
இதையடுத்து கே. அண்ணாமலையிடம் விசாரிக்க கோரி கடந்த ஜனவரி 31-ம் தேதியே காவல்துறை டிஜிபி மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிக்கு மனு அனுப்பினேன். ஆனால், அண்ணாமலையிடம் விசாரணை நடத்தப்படவில்லை. அதற்குள்ளாக விசாரணை முடிவடைந்து வழக்கில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி தீா்ப்பு அளிக்கப்பட்டது.
அதற்கு மறுநாளான ஜூன் 3-ஆம் தேதி மீண்டும் செய்தியாளா்களை சந்தித்த அண்ணாமலை, குற்றவாளியின் அழைப்புப் பதிவுகளின் விவரங்கள் இருப்பதாகவும், காவல்துறையினா் முறையாக விசாரித்து ‘சாா்’ பற்றிய அனைத்து தகவலையும் வெளியிட வேண்டும் என்றும் எச்சரிக்கும் வகையில் பேசினாா்.
அவரிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுதள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்று மனுவில் ரவி கூறியுள்ளாா்.

