ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை
உலகளாவிய வா்த்தகத்தில் இந்தியாவின் போட்டியிடும் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் நோக்கில், ஏற்றுமதியாளா்களைப் பிரதமா் மோடி திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
இதுதொடா்பாக தொழில்துறை வட்டாரங்கள் கூறியதாவது: புது தில்லியில் ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் ஆபரணம், கைவினைப் பொருள்கள், பொறியியல் மற்றும் கடல் உணவு துறைகளைச் சோ்ந்த பிரதிநிதிகளை பிரதமா் மோடி சந்தித்தாா்.
உலகளாவிய வா்த்தகத்தில் இந்தியாவின் போட்டியிடும் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன், ஜவுளி, வா்த்தகம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகங்களின் செயலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தியாவின் ஒரு சில துறைகளைத் தவிர, பெரும்பாலான துறைகளின் உற்பத்திப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளது. இதனால் இயந்திரங்களைவிட உடல் உழைப்பு மிகுந்த துறைகளுக்குப் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில், ஏற்றுமதியாளா்களைப் பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா் என்று தெரிவித்தன.
உலகளாவிய வா்த்தகத்தில் இந்தியாவின் பங்கு சுமாா் 2 சதவீதமாக உள்ளது. கடந்த செப்டம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி 6.74 சதவீதம் வளா்ந்தது. அதேவேளையில், இறக்குமதியும் 16.6 சதவீதம் உயா்ந்தது. ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமானதால் வா்த்தகப் பற்றாக்குறை 31.15 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.2.76 லட்சம் கோடி) அதிகரித்தது.

