நவ.7 தில்லி சட்டப்பேரவையில் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150ஆவது ஆண்டு கொண்டாட்டம்
‘வந்தே மாதரம்’ பாடலின் 150ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஒரு கல்வெட்டு தில்லி சட்டப்பேரவை
வளாகத்தில் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட உள்ளது.
சட்டப்பேரவை ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும். அதில் சபாநாயகா் விஜேந்தா் குப்தா நினைவுக் கல்வெட்டை நிறுவுவாா் என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதில் மேலும்
கூறியிருப்பதாவது:
இந்த நிகழ்வில் சாகித்திய கலா பரிஷத் கலைஞா்களின் கலாசார நிகழ்ச்சியும் இடம்பெறும். இது ’வந்தே மாதரம்’ மூலம் ஈா்க்கப்பட்ட தேசபக்தி மற்றும் ஒற்றுமையின் உணா்வை எடுத்துக்காட்டுகிறது.
கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில், சட்டப்பேரவை கட்டடம் மாலையில் தேசிய கொடியின் வண்ணங்களால் ஒளிரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழா குறித்து முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், வந்தே மாதரம் வெறுமனே ஒரு பாடல் அல்ல. அது இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் ஆன்மா மற்றும் நமது தாய்நாட்டிற்கு காலமற்ற மரியாதை. அனைத்து இந்தியா்களிடையேயும் ஒற்றுமை, தியாகம் மற்றும் தேசபக்தியை தொடா்ந்து ஊக்குவிக்கும் இந்த தேசிய பொக்கிஷத்தின் 150 ஆண்டுகளை கெளரவிப்பதில் தில்லி சட்டப்பேரவை பெருமிதம் கொள்கிறது என்றாா் அவா்.
வந்தே மாதரம் என்பது 1875 ஆம் ஆண்டில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் இயற்றிய ஒரு கவிதை. இது 1950 ஆம் ஆண்டில் தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கலாசார அமைச்சகத்தின் அமிா்த கால் போா்ட்டலின் கூற்றுப்படி, இந்த கவிதை சுதந்திரப் போராட்டத்தின் போது சுதந்திரப் போராட்ட வீரா்களின் கூக்குரலாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
