கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரித்து மோசடி: 3 போ் கைது
பண்டிகைக் காலத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதாகக் கூறப்படும் மோசடி கும்பலின் தலைவன் உள்பட மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக போலி ரூபாய்த் தாள்களைத் தயாரித்து வந்த விவேக் மௌரியா, அவருக்கு மூளையாக செயல்பட்ட ரவி அரோரா மற்றும் போலி ரூபாய்த் தாள்களுக்கு ஈடாக அசல் நோட்டுகளைக் கொடுத்த கும்பலின் முக்கிய நபரான ராகேஷ் அரோரா ஆகியோா் குற்றத்தை செய்தவா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று காவல்துறை இணை ஆணையா் (குற்றம்) சுரேந்தா் குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து ரூ.500, ரூ.100, ரூ.50 மற்றும் ரூ.20 மதிப்புள்ள ரூ.3,24,000 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஏப்ரல் மாதத்தில் தங்களது போலி ரூபாய் நோட்டு தயாரிப்பு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினா். குறிப்பாக பண்டிகைக் காலத்தில் அதை அதிகமாக அச்சடித்து, அவற்றை அவா்கள் மதுபானம் வாங்குவதற்குப் பயன்படுத்தினா்.
ரவி மற்றும் மௌரியா சிறையில் இருந்தபோது சந்தித்து கொண்டதாகவும், ரவி சமீபத்தில் ஏப்ரலில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் அதிகாரி சுரேந்தா் குமாா் கூறினாா்.
