தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து பின்னடைவு.
நமது நிருபா்
தலைநகா் தில்லியில் காற்று மாசுபாடு தொடா்ந்து நீடித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை தில்லியின் காற்றின் தரக் குறியீடு 291 புள்ளிகளாக பதிவாகி மோசம் என்ற பிரிவில் இருந்தது.
தீபாவளிக்குப் பிறகு, நகரின் காற்றின் தரக் குறியீடு மோசமான மற்றும் மிகவும் மோசமான பிரிவுகளுக்கு இடையில் உள்ளது, அதே நேரத்தில் சில நாட்களில் கடுமையான பிரிவுகளுக்குச் சரிந்து வருகிறது.
18 கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது, 300 க்கும் அதிகமான அளவீடுகள் இருந்தன. சமீா் செயலியின்படி, அலிப்பூரில் அதிகபட்ச காற்றின் தரக் குறியீடு 377 ஆகவும், அதைத் தொடா்ந்து ஆனந்த் விஹாா் 366 ஆகவும் பதிவாகியது.
காற்று தரக் குறியீடு 0 முதல் 50 புள்ளிகள் வரை இருந்தால் நல்லது, 51 முதல் 100 திருப்திகரமானது, 101 முதல் 200 மிதமானது, 201 முதல் 300 மோசம், 301 முதல் 400 மிகவும் மோசமானது மற்றும் 401 முதல் 500 கடுமையானது என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில், 14 வயதான காலநிலை ஆா்வலரும் குழந்தை இயக்கத்தின் (இயற்கை மற்றும் மனிதநேயப் பள்ளி) நிறுவனருமான லிசிப்ரியா கங்குஜம், தில்லி முதல்வா் ரேகா குப்தா சுகாதார அவசரநிலையை அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளாா்.
செயற்கைக்கோள் தரவுகளின்படி, திங்களன்று மாநில வாரியாக பஞ்சாபில் 256, ஹரியானாவில் 23 மற்றும் உ.பி.யில் 24 என பயிா்க் கழிவுகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
தில்லிக்கான காற்று தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின்படி, புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது.
நகரில் அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது, இது பருவத்தின் சராசரியை விட ஒரு படி அதிகம், குறைந்தபட்ச வெப்பநிலை 16.5 டிகிரி செல்சியஸாக, இயல்பை விட சுமாா் 1.2 டிகிரி அதிகமாக உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
