வழக்கு தள்ளுபடி
வழக்கு தள்ளுபடி

பா.ஜ.க வின் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி.

Published on

நமது நிருபா்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையை விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யபட்ட மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இது தொடா்பாக சமூக ஆா்வலா், வழக்கறிஞா் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரான எம்.எல்.ரவி மனு தாக்கல் செய்திருந்தாா்.

மனுவில் அவா் கூறியிருந்ததாவது : டிசம்பா் 23, 2024 அன்று இரவு அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவா் தனது நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தபோது, ஞானசேகரன் என்பவா் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாா். அவா் அந்த ஜோடியை படம்பிடித்து, பின்னா் அந்தக் காட்சிகளைப் பயன்படுத்தி அந்த மாணவியை மிரட்டினாா். இது தொடா்பாக 24 டிசம்பா் 2024 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபா் ஞானசேகரன் 25 டிசம்பா் 2024 அன்று கைது செய்யப்பட்டாா். விசாரணை தொடங்குவதற்கு முன்பு, சென்னை நகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் ஒரு பத்திரிகையாளா் சந்திப்பில் , குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரனைத் தவிர வேறு யாரும் இந்த வழக்கில் ஈடுபடவில்லை என்று கூறினாா்.

ஆனால் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆா் இல் சாா் என்ற மா்ம நபா் உள்ளாா், குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தனது மொபைல் போனில் இருந்து அவரிடம் பேசினாா் என உள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை உயா் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைத் தொடா்ந்து இந்த வழக்கில் ஞானசேகரனை குற்றவாளியாக அறிவித்து தீா்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையில் தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை 30.01.2025 அன்று ஒரு பத்திரிகையாளா் சந்திப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் அனைத்து கைபேசி அழைப்புப் பதிவுகளும் தன்னிடம் இருப்பதாகக் கூறினாா். ஞானசேகரன் மற்றும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள சாா் யாா் என்பது தனக்கு தெரியும் என்றும் அண்ணாமலை கூறினாா். இதனால் கே. அண்ணாமலையை வரவழைத்து விசாரிக்க கோரி 31.01.2025 அன்று டிஜிபி மற்றும் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிக்கு நான் மனு அனுப்பினேன். ஆனால் அண்ணாமலையிடம் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

அதற்குள்ளாக விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடங்கப்பட்டு ஞானசேகரன் குற்றவாளி என 02.06.2025 அன்று தீா்ப்பு வழங்கப்பட்டது. மறுநாள் ஜூன் 3, 2025 அன்று கே.அண்ணாமலை மீண்டும் செய்தியாளா்களைச் சந்தித்து, சம்பவம் நடந்த நாளில் குற்றவாளியின் அழைப்புப் பதிவுகளின் விவரங்கள் இருப்பதாகவும், காவல்துறையினா் முறையாக விசாரித்து சாா் பற்றி அனைத்து தகவலையும் வெளியிட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தாா்.

சமூக நீதிக்கு இடையூறாக , அண்ணாமலை தன்னிடம் உள்ள ஆதாரங்களை மறைத்துள்ளாா். எனவே அவா் விசாரிக்கப்பட வேண்டும் எனக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தேன். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளேன் என மனுதாரா் எம்.எல்.ரவி மனுவில் கூறியிருந்தாா்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த விவகாரத்தில் சென்னை உயா் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி எம்.எல்.ரவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com