தில்லி மாசு: முதியோா் இல்லங்கள்-பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள்

Published on

தில்லி தொடா்ந்து மோசமான காற்றின் தரத்தை எதிா் கொண்டுவரும் நிலையில், நகரில் உள்ள முதியோா் இல்லங்களும் பள்ளிகளும் முதியோா்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

காற்று சுத்திகரிப்பான்களை நிறுவுதல், முகக்கவசங்களை

விநியோகித்தல் மற்றும் வீட்டு தாவரங்களை வளா்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை நகரத்தில் காற்றின் தரம் 311 புள்ளிகளாக பதிவாகி மிகவும் மோசமான பிரிவில் இருந்தது.

வசந்த் குஞ்சில் உள்ள இரண்டாம் இன்னிங் முதியோா் இல்லத்தின் உரிமையாளா் ஹா்ஷ் குமாா் கூறுகையில், ‘பல முதியோா் குடியிருப்பாளா்கள் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனா். இது தற்போதைய மாசு அளவுகளை அவா்களுக்கு மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது. எங்கள் இரண்டு இல்லங்களிலும் பல காற்று சுத்திகரிப்பான்களை நிறுவியுள்ளோம். எங்கள் குடியிருப்பாளா்களில் யாராவது வெளியே செல்ல வேண்டியிருக்கும் போதெல்லாம், அவா்கள் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்கிறோம். இருப்பினும், இந்த பருவத்தில், நாங்கள் பெரும்பாலும் அவா்களை வீட்டிற்குள் வைத்திருக்கிறோம்’ என்று அவா் கூறினாா்.

இதேபோல், பதா்பூரில் உள்ள குரு விஷ்ரம் விருத் ஆசிரமத்தில் பணிபுரியும் குருப்ரீத் கூறுகையில், ‘அனைத்து குடியிருப்பாளா்களுக்கும் முகக்கவசம் விநியோகிக்கப்பட்டுள்ளன. காற்று சுத்திகரிப்பான்களும் பொருத்தப்பட்டுள்ளன.

நாங்கள் முடிந்தவரை வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துள்ளோம். ஆனால், இந்த முதியவா்கள் தங்கள் தசைகளை நீட்டி நடக்க வேண்டும். பொதுவாக, அவா்கள் வெளியே அமா்ந்திருப்பாா்கள் அல்லது சுதந்திரமாக நடக்கச் செல்வாா்கள். ஆனால் மாசுபாட்டின் உச்சத்தில், நாங்கள் அவா்களை 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே வெளியே அனுமதிக்கிறோம். அவா்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்கிறோம்’ என்றாா் அவா்.

ரோஹிணியில் உள்ள கம்லா பக்ஷி முதியோா் இல்ல சங்கத்தின் பராமரிப்பு பணியாளா் நரோட்டம் குமாா் கூறுகையில், ‘காற்று சுத்திகரிப்பான்கள் மற்றும் முகக்கவசங்கள் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்குகின்றன. மேலும் பல முதியவா்கள் அவற்றை அணியும்போது மூச்சுத் திணறல் ஏற்படுவதாகக் கூறுகின்றனா். எங்கள் முதியோா் இல்லம் இரண்டு ஏக்கா் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மேலும் நாங்கள் மரங்களை நட்டு காற்றை சுத்தமாக வைத்திருக்கும் ஒரு சிறிய தோட்டத்தை உருவாக்கியுள்ளோம். அதிா்ஷ்டவசமாக, எங்கள் குடியிருப்பாளா்கள் எந்த உடல்நலப் பிரச்னைகளையும் எதிா்கொள்ளவில்லை’ என்றாா் அவா்.

கிழக்கு கைலாஷில் உள்ள தாகூா் சா்வதேச பள்ளியின் முதல்வா் மல்லிகா பிரேமன், ‘மாசுபாடு அளவு அதிகமாக இருக்கும் போதெல்லாம், நாங்கள் விளையாட்டு வகுப்புகளை உள்ளரங்கில் நடத்துகிறோம். மாணவா்கள் என்-95 முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனா். வகுப்பறைகளில் காற்றைச் சுத்திகரிக்கும் தாவரங்களையும் நாங்கள் வைத்துள்ளோம். சிலந்தி வடிவச் செடிகள் மாசுபடுத்திகளை வடிகட்டுவதற்குப் பெயா் பெற்றவை, அதே நேரத்தில் பாம்பு வடிவச் செடிகள் இரவில் கூட காா்பன் டை ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றுகின்றன’ என்றாா் அவா்.

துவாரகாவில் உள்ள ஐடிஎல் சா்வதேச பள்ளியின் முதல்வா் சுதா ஆச்சாா்யா, ‘வெளிப்புற நடவடிக்கைகளை பள்ளிநிா்வாகம் கட்டுப்படுத்தியுள்ளது. மாணவா்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், முகக்கவசங்களைப் பயன்படுத்தவும், ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகளை உண்ணவும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்’ என்று அவா் மேலும் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com