இலங்கை திட்டங்களுக்கு இந்தியாவின் ஆதரவு: மத்திய நிதியமைச்சருக்கு சஜித் பிரேமதாச நன்றி
இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள இலங்கை குழுவுக்குத் தலைமை வகிக்கும் அந்நாட்டின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இலங்கையில் 2022-இல் ஏற்பட்ட நெருக்கடியின்போது இந்தியா வழங்கிய 400 கோடி அமெரிக்க டாலர்கள் நிதியுதவிக்காக அவர் நன்றி தெரிவித்தார். தங்கள் தேசத்துக்கு ஒரு தனி நாட்டு அளித்த மிகப்பெரிய நிதியுதவி அதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழிற்துறை வேகமாக முன்னேற முடியும் என சஜித்திடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், வலுவான உள்நாட்டு தொழிற்துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்த முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொழிற்துறை கொள்கை மற்றும் எண்ம ஆளுகையில் இந்தியா நிகழ்த்தி வரும் சாதனைகளை பாராட்டிய சஜித் பிரேமதாச, ஒப்பீட்டளவில் இலங்கையில் தற்போது ஸ்திரத்தன்மை காணப்பட்டாலும் ஏற்றுமதி வாய்ப்புகளை பன்முகப்படுத்துதல் மற்றும் வறுமை ஒழிப்பில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இரு தரப்பிலும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை உரவில் பரஸ்பரம் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையைப் பேணுவதில் இரு நாடுகளும் இணக்கம் காட்டி வரும் தகவல்களை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது, கூட்டு முயற்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கு இந்தியா-இலங்கை இடையே தொழிநுட்பம் சார்ந்த தொழில் வலயத்தை உருவாக்க சஜித் பிரேமதாச யோசனை தெரிவித்தார். நவீன வர்த்தக எதார்த்தத்திற்கு ஏற்ப, இந்தியா, இலங்கை இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சரை சந்தித்த பிறகு, சஜித் தலைமையிலான இலங்கை குழுவினர், இந்திய அரசின் கொள்கை குழு அமைப்பான நீதி ஆயோக் அலுவலகத்துக்குச் சென்றது.
அங்கு அதன் துணைத்தலைவர் சுமன் கே. பேரி மற்றும் குழுவின் உறுப்பினர்களை சந்தித்துப் பேசினர். இந்திய அரசின் நீண்டகால கொள்கையை வடிவமைத்து களத்தில் அவற்றின் அமலாக்கத்தில் காணப்படும் இடைவெளியைக் குறைப்பதில் நிதி ஆயோக் வழங்கி வரும் பங்களிப்பை சஜித் பிரேமதாச பாராட்டினார்.
முன்னதாக, இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை குழு, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் போன்றவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பை புதுப்பித்து மேம்படுத்தும் முயற்சிகளை தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

