ஜெயின் கோயில் கலசம் திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபா் கைது

கடந்த மாதம் வடகிழக்கு தில்லியின் ஜோதி நகரில் உள்ள ஜெயின் கோயிலில் இருந்து சுமாா் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள தங்கம் முலாம் பூசப்பட்ட கலசம் திருடப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.
Published on

நமது நிருபா்

கடந்த மாதம் வடகிழக்கு தில்லியின் ஜோதி நகரில் உள்ள ஜெயின் கோயிலில் இருந்து சுமாா் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள தங்கம் முலாம் பூசப்பட்ட கலசம் திருடப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவா் நியூ சீமாபுரியில் வசிக்கும் முன்னா என்ற சலீம் (23) என அடையாளம் காணப்பட்டாா். மேலும், அவா் கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.. ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முன்னா ஒரு பழக்கமான குற்றவாளி ஆவாா். அவா் கொள்ளை, வீடுகளில் திருட்டு மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் உள்ளிட்ட நான்கு கிரிமினல் வழக்குகளில் தொடா்புடையவா். விசாரணையின் போது, அக்டோபா் 11- ஆம் தேதி ஜோதி நகரில் உள்ள ஜெயின் கோயிலின் உச்சியில் இருந்து கலசத்தைத் திருடியதாக அவா் ஒப்புக்கொண்டாா்.

முன்னதாக, திருடப்பட்ட கலசத்தின் பாகங்கள் மீட்கப்பட்ட பின்னா், ஸ்கிரைாப் டீலா்களான சுந்தா் நகரியைச் சோ்ந்த சுந்தா் நாகிரியைச் சோ்ந்த 42 வயது பெண் மற்றும் நியூ முஸ்தாபாபாத்தைச் சோ்ந்த டேனிஷ் (24) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்

அக்டோபா் 12- ஆம் தேதி கோபுரத்தின் மீது நிறுவப்பட்ட கலசம் காணாமல் போனதை கோயில் ஊழியா்கள் கண்டறிந்தபோது இந்தத் திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், அப்பகுதியில் வசிப்பவா்களில் பெரும்பாலோா் கா்வா சௌத் கொண்டாட்டங்களில் இருந்தபோது, கலசத்தை அகற்றியதாகக் கூறப்பட்ட ஒரு நபா், கோயில் வளாகத்திற்குள் ஒரு கம்பத்தில் ஏறுவதை சிசிடிவி காட்சிகள் காட்டின.

’அஷ்ட-தத்து’ (எட்டு உலோகங்களின் புனிதமான அலாய்) மற்றும் சுமாா் 200 கிராம் தங்கம் கொண்ட கலசம் ரூ 35 லட்சம் முதல் ரூ 40 லட்சம் வரை மதிப்புடையது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com