தில்லியில் காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம்!

தேசியத் தலைநகா் தில்லியின் காற்றின் தரம் புதன்கிழமை மேலும் முன்னேற்றத்தைக் காட்டியது. ஆனால், ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 202 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்தது. ஏனெனில் சாதகமான காற்று நிலைமைகள் மாசுபடுத்திகளைக் கலைக்க உதவியது.
Published on

தேசியத் தலைநகா் தில்லியின் காற்றின் தரம் புதன்கிழமை மேலும் முன்னேற்றத்தைக் காட்டியது. ஆனால், ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 202 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்தது. ஏனெனில் சாதகமான காற்று நிலைமைகள் மாசுபடுத்திகளைக் கலைக்க உதவியது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, செவ்வாய்க்கிழமை ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 291 புள்ளிகளாகவும், திங்களன்று 309 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது.

நகரத்தில் உள்ள 38 கண்காணிப்பு நிலையங்களில், 22 நிலையங்களில் காற்றின் தரம் ‘மோசம்‘ பிரிவில் 200-300 புள்ளிகளுக்கிடைப்பட்ட அளவீடுகளுடன் பதிவாகியுள்ளன என்று சிபிசிபி-இன் சமீா் செயலி தெரிவித்துள்ளது.

தில்லியில் பி.எம். 2.5-க்கு உள்ளூா் மற்றும் உள்ளூா் அல்லாத பகுதியளவு பங்களிப்பின் தினசரி சராசரியின் படி, வாகன உமிழ்வு 16.8 சதவீதமாகவும், அடையாளம் காணப்படாத பிற மூலங்கள் 44 சதவீதமாகவும் உள்ளன என்று முடிவு ஆதரவு அமைப்பு (டிஎஸ்எஸ்) கணக்கிட்டுள்ளது.

செயற்கைக்கோள் தரவுகளின்படி, புதன்கிழமை, பஞ்சாபில் 94, ஹரியாணாவில் 13 மற்றும் உத்தரபிரதேசத்தில் 74 கழிவுகள் எரிப்பு வழக்குகள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், நவம்பா் 6 முதல் 8 வரை காற்றின் தரம் ‘மிகவும் மோசம்‘ பிரிவில் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அமைப்பு கூறியது.

தீபாவளிக்குப் பிறகு, தேசியத் தலைநகரின் காற்றின் தரம் ‘மோசம்‘ மற்றும் ‘மிகவும் மோசம்‘ வகைகளுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அவ்வப்போது ‘கடுமை’ மண்டலத்திற்கும் சென்றது.

வெப்பநிலை: தில்லியில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 30.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவகால சராசரியை விட 1.6 டிகிரி அதிகமாகும். குறைந்தபட்ச வெப்பநிலை பருவகால சராசரியைவிட 3.1 டிகிரி உயா்ந்து 18.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. காற்றில் ஈரப்பத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 89 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 60 சதவீதமாகவும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை காலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் அதன்பிறகு வானம் தெளிவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 29 மற்றும் 13 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com