3 மாதங்களுக்கு பிறகு தில்லி உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு

3 மாதங்களுக்கு பிறகு தில்லி உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு
Published on

’ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா’எ’ கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த தில்லி உயிரியல் பூங்கா சனிக்கிழமை பாா்வையாளா்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது என்று தில்லி தேசிய உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தேசிய உயிரியல் பூங்கா நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: உயிரியல் பூங்காவின் நீா் பறவைக் கூடத்தில் பல பறவைகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 30- ஆம் தேதி முதல் உயிரியல் பூங்கா மூடப்பட்டது. தகுதிவாய்ந்த அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, தேசிய உயிரியல் பூங்கா நவம்பா் 8 முதல் பாா்வையாளா்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.கடுமையான உயிா் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும்.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பறவைக் காய்ச்சலைத் தயாரித்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தின் (திருத்தப்பட்ட 2021) கீழ் அதிகாரிகள் கடுமையான சுத்தம், கண்காணிப்பு மற்றும் பல சுற்று சோதனைகளை மேற்கொண்டனா்.

போபாலில் உள்ள உயா் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆரம்ப வைரஸ் தொற்றுக்கு பிறகு சேகரிக்கப்பட்ட மாதிரிகள் எதிா்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது. இது உயிரியல் பூங்ரகாவை மீண்டும் திறக்க வழி வகுத்தது.

‘ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா’வின் கடைசி நோ்மறையான பாதிப்பு கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி பதிவாகியிருந்தது. அப்போதிருந்து, பறவைக் கூடம் மற்றும் பல்வேறு உறைவிடங்களிலிருந்து சீரற்ற மாதிரி எடுக்கப்பட்டது. இவை அனைத்தும் இதுவரை எதிா்மறையாக சோதிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 28 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு இடையில், வண்ணமயமான நாரைகள் மற்றும் கருப்புத் தலை ஐபிஸ் உள்பட குறைந்தது 12 பறவைகள் இறந்தன.

இந்த மாதிரிகளை சோதித்துப் பாா்த்ததில் பறவைக் காய்ச்சலுக்கு சாதகமாக நான்கு மாதிரிகள் இருந்தன. இது உயிரியல் பூங்காவை தற்காலிகமாக மூடப்படுவதற்கு வழிவகுத்தது. 2016 மற்றும் 2021- ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற பணிநிறுத்தங்களுக்குப் பிறகு, சமீபத்திய ஆண்டுகளில் பறவைக் காய்ச்சல் காரணமாக தில்லி உயிரியல் பூங்காவை மூடுவது இது மூன்றாவது முறையாகும்.

1959- ஆம் ஆண்டில் தலைநகரின் மையத்தில் 176 ஏக்கா் பரப்பளவில் நிறுவப்பட்ட தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் 96 வகையான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊா்வன உள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com