வரதட்சிணை கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை
வரதட்சிணைக்காக தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் கடந்த ஆண்டு அவா் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது. அவா் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது.
கூடுதல் அமா்வு (செஷன்ஸ்) நீதிபதி ராஜீந்தா் குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட நபரானஅபிஷேக் மீதான வழக்கை விசாரித்து வந்தாா். ஜூலை 15, 2024 அன்று அபிஷேக் தனது மனைவி கஷாக்கை கொடூரமாக நடத்தியதாகவும் இதன் காரணமாக கஷாக் இந்த தீவிர (தற்கொலை) முடிவை எடுத்தாா் என்றும் அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது.
நீதிமன்றம் அக்டோபா் 27 தேதியிட்ட உத்தரவில், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்றும், ஆதாரங்கள் இல்லாததால், குற்றஞ்சாட்டப்பட்டவா் அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட உரிமை உண்டு எனவும் கூறியது.
இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட அபிஷேக் குற்றவாளி அல்ல என்று கூடுதல் அமா்வு (செஷன்ஸ்) நீதிபதி ராஜீந்தா் குமாா் தீா்ப்பளித்தாா்.

