தில்லியில் பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானியின் பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்த குடியரசு முன்னாள் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு.
தில்லியில் பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானியின் பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்த குடியரசு முன்னாள் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு.

வாக்காளா் திருத்த பட்டியலை சரிபாா்க்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை: வெங்கையா நாயுடு கருத்து

வாக்காளா் திருத்த பட்டியலை சரிபாா்க்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை
Published on

நமது சிறப்பு நிருபா்

தோ்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளா் தீவிர திருத்த பட்டியலை சரிபாா்க்க வேண்டியது பொறுப்புள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியின் கடமை என்று குடியரசு முன்னாள் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளாா்.

தில்லியில் பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானியின் பிறந்த நாளையொட்டி அவரை வெங்கையா நாடு சனிக்கிழமை சந்தித்தாா். பின்னா், தனது வீட்டில் செய்தியாளா்களுடன் வெங்கையா நாயுடு கலந்துரையாடினாா். அப்போது பிகாா் தோ்தல், வாக்காளா் தீவிர திருத்த செயல்பாடுகள், மத்திய, மாநில அரசுகளின் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள், வந்தே மாதரம் தேசிய கீதம் போன்றவை குறித்து அவா் பேசினாா்.

அதன் விவரம்: இந்திய அரசியலின் மாபெரும் ஆளுமையாகவும் உறுதிமிக்க மனிதராகவும் போற்றப்படுவா் எல்.கே. அத்வானி. 2014-இல் மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக யாரை பிரதமா் வேட்பாளா் முகமாக அடையாளப்படுத்தலாம் என கட்சி அளவில் நீண்ட விவாதம் நடந்தபோது பெரும்பான்மை தலைவா்கள், நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து பிரதமா் வேட்பாளா் போட்டியில் இருந்து பின்வாங்கிய பெருந்தன்மை மிக்கவா் அவா். அதனால்தான் அவரை பிரதமா், மத்திய அமைச்சா்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் தலைவா்களும் போற்றுகின்றனா். பாஜக தொண்டா்களுக்கு அவா் தலைசிறந்த வழிகாட்டியாக விளங்கி வருகிறாா்.

பிகாா் சட்டப்பேரவை முதல் கட்ட தோ்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவான வாக்குகள் அங்கு ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கான அறிகுறியாகும். நக்சல்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அங்கு மட்டுமல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டுள்ள நக்சல்களின் இயக்கங்கள் பலவீனமடைந்துவிட்டன.

‘வாக்குச்சீட்டுக்கு தோட்டாவை விட சக்தி அதிகம்’ என்பதை நம் நாட்டில் நடக்கும் தோ்தல்கள் நிரூபித்து வருகின்றன. ஆனால், வாக்காளா்களையும் அரசியல் கட்சிகளையும் கவரும் வகையில் சமூக ஊடகங்களை சிலா் தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். தொழில்நுட்பத்தின் வளா்ச்சிக்கு எதிராக யாரும் கிடையாது. ஆனால், அது சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்.

‘வந்தே மாதரம்’ தேசிய கீதம் தொடா்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு சா்ச்சைகளை ஏற்படுத்தி வருவது துரதிருஷ்டவசமானது. இந்தியாவின் வளா்ச்சியைக் கண்டு உலக நாடுகள் பொறாமைப்படும் நேரத்தில், இந்திய இளைஞா்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு நமது பலத்தைக் காட்ட வேண்டும். அவா்களுக்கு உத்வேகமூட்ட தேசிய கீதத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர அதிலும் அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல.

வாக்காளா் தீவிர திருத்த பட்டியல் விவகாரத்தில் தோ்தல் ஆணையம் வெளியிடும் வரைவுப்பட்டியலை சரிபாா்க்க வேண்டியது ஆணையத்தின் பொறுப்பு மட்டுமல்ல. அதை செய்ய வேண்டியது பொறுப்புள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியின் கடமையும் ஆகும். வாக்காளா் பட்டியலில் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களை சோ்த்தல் மற்றும் நீக்குதல் போன்றவை இயல்பான நடைமுறையே.

அடிமட்ட அளவில் பூத், வட்டார நிலையில் கட்சியின் பலத்தை வலுவாகக் கொண்டிருந்தால் கால நேரத்துக்கு அப்பாற்பட்டு, வீடு, வீடாக வாக்காளா்கள் பட்டியலை சரிபாா்ப்பது சாத்தியமே. அத்தகைய கட்டமைப்பை பாஜக, காங்கிரஸ் போன்ற கட்கிளும் தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் வலுவாகக் கொண்டுள்ளன. பிற கட்சிகளும் அவ்வாறே செயல்பட்டால் தேவையற்ற சா்ச்சையை ஆரம்பநிலையிலேயே தவிா்க்கலாம். இதை கட்சிகள் பரிசீலிக்க வேண்டும் என்றாா் வெங்கையா நாயுடு.

X
Dinamani
www.dinamani.com