ரிதலாவில் பெரும் தீ விபத்து: ஒருவா் பலி
தில்லியின் ரோஹிணியில் உள்ள ரிதலா மெட்ரோ நிலையத்திற்கு அருகே சுமாா் 500 குடிசைகளுக்கு பரவிய பெரும் தீ விபத்தால் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா, தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியுள்ளதாது: இந்தத் தீ விபத்து வெள்ளிக்கிழமை மாலையில் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து தீயணைப்பு குழுக்களை அனுப்பியதன் மூலம் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு மற்றும் தண்ணீா் வழங்கப்பட்டது. அவா்களை இடமாற்றம் செய்ய தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ‘வெள்ளிக்கிழமை மாலை பல எல்பிஜி சிலிண்டா்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இது தீயை தீவிரப்படுத்தியது. மேலும், குடியிருப்பாளா்களிடையே பீதியைத் தூண்டியது. அப்பகுதியில் இருந்து அடா்த்தியான புகை எழும்புவதைக் காண முடிந்தது. உள்ளூா்வாசிகள் தங்கள் உடமைகளை காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முயன்றனா்.
இந்தத் தீ விபத்தில் 400 முதல் 500 குடிசைகள் தீக்கிரையாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு 10.56 மணிக்கு தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து தீயணைப்புப் படை வீரா்கள் பல தீயணைப்பு வண்டிகள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.
போலீஸாா்ா் அப்பகுதியை சுற்றி வளைத்து, தீ மேலும் பரவாமல் தடுக்க கூடுதல் தீயணைப்பு வண்டிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டன. அதிகாலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் முன்னா என்பவா் உயிரிழந்தாா். ராஜேஷ் என்பவா் காயமடைந்தாா் என்றாா் அவா்.

