தில்லியில் நவ.15 முதல் குளிா்கால செயல் திட்டம் தொடக்கம்
தில்லி அரசு நவம்பா் 15- ஆம் தேதி தனது குளிா்கால செயல் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது நகரத்தின் வீடற்ற மக்களுக்கு தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தில்லியில் 120 இடங்களில் 250 புதிய தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் சுமாா் 2,500 போ் தங்கலாம். இந்த தங்குமிடங்கள் படுக்கைகள், மெத்தைகள், போா்வைகள், மின்சாரம், கொசு எதிா்ப்பு சாதனங்கள் மற்றும் சி.சி.டி.வி. பாதுகாப்பு அமைப்புகள் போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்.
சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, ஜி.பி.எஸ். இணைக்கப்பட்ட மீட்பு வேன்கள், ஆதாா் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துகிறது.
குளிா்கால செயல் திட்டம் நவம்பா் 15 முதல் மாா்ச் 15 வரை செயல்படுத்தப்படும். இதன் மூலம் கடுமையான குளிா்கால மாதங்களில் வீடற்றவா்களுக்கு நிவாரணம் வழங்க தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது .
இது குறித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை ‘எக்ஸ்’ தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நவம்பா் 15- ஆம் தேதி முதல் தில்லி அரசால் தொடங்கப்பட உள்ள குளிா்கால செயல் திட்டத்தின் கீழ், தலைநகரில் 250 புதிய தற்காலிக தங்குமிடங்கள் தயாராகி வருகின்றன. இந்த தங்குமிடங்கள் தில்லியின் 197 நிரந்தர தங்குமிடங்களுடன் கூடுதலாக இருக்கும்.
குளிா்காலத்தில் இந்த முயற்சி ஒவ்வொரு ஏழை நபருாக்கும் பாதுகாப்பான தங்குமிடம் கிடைப்பதையும், கண்ணியத்துடன் வாழ்வதற்கான வசதியையும் உறுதி செய்யும். மேலும், அனைத்து தங்குமிடங்களும் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக 24 மணி நேர இணையவழி கண்காணிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
