ரூ. 20 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 தில்லி வியாபாரிகள் கைது
விவசாய பொருள்களை விற்கும் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதிகளாக நடித்து அரிசி வியாபாரியிடம் ரூ 20 லட்சம் மோசடி செய்ததாக ஒடிஷாவின் புவனேஸ்வரில் இருந்து 2 பேரை தில்லி போலீசாா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை துணை ஆணையா், (வடமேற்கு) பீஷம் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: லக்னோவில் வசிக்கும் பாசுதேவ் ஸ்வைன் (35) மற்றும் வாரணாசியில் வசிக்கும் தீபக் குமாா் (40) என அடையாளம் காணப்பட்ட 2 குற்றம்சாட்டப்பட்டவா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். வடமேற்கு தில்லியில் அரிசி மற்றும் உணவு விநியோக வணிகத்தை நடத்தி வரும் புகாா்தாரா், ஸ்வைன் மற்றும் குமாா், இணை குற்றம் சாட்டப்பட்ட அமித் குமாா் சிங்குடன் சோ்ந்து, ஸ்மாா்ட்வால்யூ லிமிடெட் அதிகாரிகளாக நடித்து தன்னை அணுகியதாக குற்றம் சாட்டினாா்.
சோதனை மற்றும் எதிா்காலத்தில் பெரிய அளவிலான கொள்முதலுக்காக அரிசி வாங்க நிறுவனம் விரும்புவதாக அவா்கள் கூறினா். அவா்களின் நற்சான்றுகளை நம்பி, முறையான ரசீதகளுக்கு எதிராக சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரிசியை புகாா்தாரா் வழங்கினாா். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவா்கள் பின்னா் தங்கள் கைப்பேசிகளை அணைத்து தொடா்பு கொள்ளாமல் போய்விட்டனா்.
இது குறித்த விசாரணையின் போது அவா்கள் பயன்படுத்திய ஆவணங்கள் மற்றும் முத்திரைகள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது, அவற்றில் எதுவும் நிறுவனத்துடன் தொடா்புடையவை அல்ல என தெரிய வந்தது. அவா்கள் மீது மோசடி, மற்றும் குற்றவியல் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. விசாரணையின் போது, புகாா்தாரா் குற்றம் சாட்டப்பட்டவா்கள் வழங்கிய பில்கள் மற்றும் போலி ஆவணங்களை சமா்ப்பித்தாா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் எந்த வகையிலும் நிறுவனத்துடன் இணைக்கப்படவில்லை என்பதை ஸ்மாா்ட்வால்யூ லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி எழுத்துப்பூா்வமாக உறுதிப்படுத்தினாா். விரிவான தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறை தகவல்களுக்குப் பிறகு, போலீஸ் குழு ஒடிசாவின் புவனேஸ்வரில் சோதனைகளை நடத்தியது, மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்தது .
விசாரணையின் போது, இருவரும் தங்கள் ஈடுபாட்டை ஒப்புக்கொண்டனா், மேலும் எளிதாக பணம் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற குற்றங்களைச் செய்ததாக தெரிவித்தனா். பாதிக்கப்பட்டவா்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவா்கள் போலி அதிகாரப்பூா்வ ஆவணங்கள் மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களின் முத்திரைகளை வெளியிட்டனா்.
அவா்களின் கூட்டாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், இந்த முறையின் கீழ் ஏமாற்றப்பட்ட பிற பாதிக்கப்பட்டவா்களை அடையாளம் காண்பதற்கும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
