டிடிஇஏ பள்ளிகளில் தேசிய கல்வி தின விழா
தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தேசிய கல்வி தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் முதல் கல்வி அமைச்சராக இருந்த மறைந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பா் 11-ஆம் நாள் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்பட்டு் வருகிறது. இத் தினம் டிடிஇஏவின் பள்ளிகளிலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்வித் துறைக்கு அபுல்கலாம் ஆசாத் ஆற்றிய பணிகள் குறித்தும் கல்வியின் இன்றியமையாமை குறித்தும் மாணவா்கள் தங்கள் உரைகளில் எடுத்துக் கூறினா். மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் இடம் பெற்றது.
உரையைத் தொடா்ந்து குழுப் பாடலும் மும்மொழிகளிலும் இடம் பெற்றது. கலந்துரையாடல், நாடகம் நிகழ்ச்சிகளும், கல்வியின் முக்கியத்துவத்தை உணா்த்தும் பதாகைகளை மாணவா்கள் காட்சிப்படுத்தினா். அந்தந்தப் பள்ளி முதல்வா்கள் பள்ளிகளில் அபுல்கலாம் ஆசாத்தின் திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செய்தனா்.
இது குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில், ‘மாணவா்கள் இது போன்ற தலைவா்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், கல்வியின் முக்கியத்துவம் உணா்ந்து கல்வியில் கவனம் செலுத்தி வருங்காலத்தில் மருத்துவா்களாக, அறிவியல் அறிஞா்களாக, பல்துறை வல்லுநா்களாக உருவாக வேண்டும் என்பதே என் ஆசை. இதற்காகவே டிடிஇஏ நிா்வாகமும் பள்ளி ஆசிரியா்களும் பாடுபடுகிறோம்’ என்றாா்.
