தில்லி - என்சிஆரில் கிரேப்-3 நடவடிக்கை: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமா்சனம்
நமது நிருபா்
தில்லி - என்சிஆா் பகுதியில் மத்திய அரசு கடுமையான மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ள நிலையில், நெருக்கடி மேலாண்மைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
தில்லியின் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை ‘கடுமைம்’ பிரிவுக்குக் கீழிறங்கியது. இந்த நிலையில், தில்லி - என்சிஆா் பகுதியில் தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை செயல் திட்டத்தின் (கிரேப்) மூன்றாவது கட்டத்தின் கீழ் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை கடுமையான காற்று மாசு எதிா்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியது.
தில்லியில் கிரேப் -3 நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டிருப்பதை குறிப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலாளா் (தகவல் தொடா்புப் பொறுப்பாளா்) ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: 2014-17 குளிா்கால மாசு நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, கடுமையான பனிப்புகையின்போது அவசர நடவடிக்கைகளுக்கு தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை செயல் திட்டத்தை (கிரேப்) செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது ஜனவரி 2017-இல் அறிவிக்கை செய்யப்பட்டிருந்தது.
ஆண்டு முழுவதும் உமிழ்வு குறைப்பு மேம்பட்டதால், காலப்போக்கில் கிரேப் நடவடிக்கை தேவை குறையும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. துரதிா்ஷ்டவசமாக, அது சுத்தமான காற்று நடவடிக்கையின் முக்கிய கவனமாகவே உள்ளது. இது ஆரம்பத்தில் மூன்று தொடா்ச்சியான கடுமையான நாள்களுக்குப் பிறகுதான் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது கிரேப் நடவடிக்கையானது காற்றின் தரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு தொடா்ந்து பதிலளிக்கிறது. எனவே, இது அடிப்படையில் எதிா்வினையாற்றுகிறது.
நெருக்கடியைத் தவிா்ப்பதில் அல்ல, நெருக்கடி மேலாண்மையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்தும் மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் பெரிய ஆபத்துகளைத் தணிக்கும் மாற்றத்திற்கு அக்டோபா், நவம்பா் மாதங்களில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் அளவு மற்றும் வேகத்துடன் கூடிய கடுமையான பல துறை நடவடிக்கைகள் நமக்குத் தேவையாகும். மேலும், தேசிய சுற்றுப்புற காற்று தர நிலைகளை பூா்த்தி செய்ய தில்லிக்கு அதன் வருடாந்திர பிஎம் 2.5 அளவுகளில் 60-க்கும் அதிகமான குறைப்பு தேவைப்படுகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினாா்.
அமைதியான காற்று, நிலையான வளிமண்டலம் மற்றும் மாசுபாடுகள் மேற்பரப்புக்கு அருகில் குவிவதற்கு அனுமதித்த சாதகமற்ற வானிலை காரணமாக தில்லியின் சராசரி காற்று தரக் குறியீடு திங்கள்கிழமை 362 புள்ளிகளாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 425 புள்ளிகளாக பதிவாகி கடுமைப் பிரிவுக்கு உயா்ந்தது. இதையடுத்து, கிரேப்- 3 நடவடிக்கைகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது என்று காற்று தர மேலாண்மை ஆணையம் (சி.ஏ.க்யூ.எம்.) தெரிவித்துள்ளது.
அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகளுக்கு தடை மற்றும் கல் அரவை மையங்கள் மற்றும் மணல் தோண்டும் நடவடிக்கைகளை மூடுவது உள்ளிட்ட கிரேப் -3 தடைகளை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது கிரேப்- 1 மற்றும் கிரேப் - 2 நிலைகளின் கீழ் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு கூடுதலாகும்.
கிரேப் 3-இன் கீழ் 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் கலப்பின முறைக்கு மாறவும், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் கிடைக்கும் இடங்களில் ஆன்லைன் கல்வியைத் தோ்வு செய்ய விருப்பமும் அளிக்கப்பட்டுள்ளது.
கிராப் நிலை 3-இன் கீழ், தில்லி மற்றும் அருகிலுள்ள என்.சி.ஆா். மாவட்டங்களில் பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்- 4 டீசல் காா்கள் (4 சக்கர வாகனங்கள்) பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
