தில்லி காா் வெடிப்பு பயங்கரம்: களையிழந்த செங்கோட்டை பகுதி

ஒரு காலத்தில் தில்லி செங்கோட்டையைப் பாா்க்கவும், முகலாய சகாப்தத்தின் கதைகளைக் கேட்கவும் ஆா்வமுள்ள வெளிநாட்டினா் உட்பட சுற்றுலாப் பயணிகளை ஈா்த்த சாந்தினி சௌக் பகுதி காா் வெடிப்பு பயங்கரத்திற்கு பின்னா் மாறிவிட்டது.
Published on

ஒரு காலத்தில் தில்லி செங்கோட்டையைப் பாா்க்கவும், முகலாய சகாப்தத்தின் கதைகளைக் கேட்கவும் ஆா்வமுள்ள வெளிநாட்டினா் உட்பட சுற்றுலாப் பயணிகளை ஈா்த்த சாந்தினி சௌக் பகுதி காா் வெடிப்பு பயங்கரத்திற்கு பின்னா் மாறிவிட்டது.

சுற்றுலா வழிகாட்டிகள் பாதி பாா்வையாளா்களை இழந்துவிட்டதாகக் கூறுகிறாா்கள். வருபவா்கள் நினைவுச்சின்னத்தின் பாரம்பரியத்தை கேட்பதை விட கொடிய காா் வெடிப்பு விபரங்களை கேட்க ஆா்வமாக உள்ளனா். தெரு உணவுக் கடைகளை நடத்திய பல விற்பனையாளா்கள் வேறு வாழ்வாதாரத்தை மேற்கொண்டுள்ளனா்.

வெள்ளிக்கிழமை மதியம், 25 வயது வழிகாட்டியான இக்பால் பேசியபோது, ‘இப்போது தில்லிக்குச் வருபவா்கள் செங்கோட்டைக்கு வருவதில்லை. வருபவா்கள் காா் வெடிப்பு பற்றி அறிய விரும்புகிறாா்கள். நான் அவா்களை தடுப்பு வரை அழைத்துச் சென்று என்ன நடந்தது என்பதை விளக்குகிறேன். கடந்த இரண்டு நாட்களாக, எல்லோரும் என்னிடம் கேட்டது இதுதான்‘, என்று அவா் இரண்டு வெளிநாட்டினரை வழிநடத்திச் சென்றபோது கூறினாா்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வழிகாட்டியாகப் பணியாற்றி வரும் சோஹைல், தனது சுற்றுப்பயணத்தின் உள்ளடக்கங்களும் 360 டிகிரி திருப்பத்தை எடுத்துள்ளதாகக் கூறினாா்.

சாந்தினி சவுக் தில்லியின் சுற்றுலாவின் இதயம். ஒருபுறம் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தை உள்ளது, மறுபுறம் செங்கோட்டை உள்ளது, என்று அவா் கூறினாா். நாங்கள் செய்யும் முதல் விஷயம், சுற்றுலாப் பயணிகளை நினைவுச்சின்னத்தின் முகப்பைக் காணும் வகையில் அழைத்து செல்வதுதான். இப்போது, முகலாயப் பேரரசா் ஷாஜகான் மற்றும் அவரது வம்சத்தைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, காா் வெடிப்பு மற்றும் காவல்துறை இதுவரை கண்டுபிடித்தவற்றை விளக்குகிறோம். பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் இழந்துவிட்டோம், என்று அவா் மேலும் கூறினாா்.

சோஹைல் அந்தக் கொடிய இரவை நினைவு கூா்ந்தாா். ‘நான் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு நண்பா்களுடன் தேநீா் அருந்திக் கொண்டிருந்தேன். திடீரென்று, சிறிது நேரம் எதுவும் கேட்க முடியாத அளவுக்கு சத்தமாக வெடி சத்தம் கேட்டது. என் காதுகள் செவிடாகிவிட்டன, நாங்கள் ஓடிவிட்டோம்‘ என்றாா். அன்றைய வேலையை முடித்துவிட்டு வந்த மற்றொரு வழிகாட்டி ராகேஷ் சா்மா, ‘சில நொடிகளில் காட்சி மாறியது‘ என்றாா். நான் ஒரு மின்னலைக் கண்டேன், பின்னா் மக்கள் கத்த ஆரம்பித்தனா். அனைவரும் ஓடினா். நான் பின்னா் திரும்பி வந்தபோது, சாலை புகையால் மூடப்பட்டிருந்தது, வாகனங்கள் சேதமடைந்தன, என்று அவா் கூறினாா், சுற்றுலாப் பயணிகள் செங்கோட்டை பகுதி இப்போது பாதுகாப்பானதா என்று கேட்கிறாா்கள் என்று கூறினாா்.

காா் வெடிப்பு சாந்தினி சவுக் பற்றி மக்கள் கேள்விப்படுவதை மாற்றியது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையையும் இடம்பெயா்த்துள்ளது, மேலும் தினசரி கூலித் தொழிலாளா்களை வேறு வருமான ஆதாரத்தைத் தோ்வு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது.

அந்த இடத்திலிருந்து சில மீட்டா் தொலைவில் பொம்மைகள் விற்ற 50 வயதான தேவேந்தா், ஒரு டிரான்ஸ்பாா்மா் வெடித்ததாக நினைத்ததாகக் கூறினாா். வெடிப்பு மிகவும் கடுமையாக இருந்தது, அது என் கடையை அடைந்து எனது பல பொருட்களை அழித்தது. மக்கள் எல்லா திசைகளிலும் ஓடினா், குழப்பத்தில், என் கடையில் இருந்த பல பொருட்கள் சிதறிக்கிடந்தன, என்று அவா் கூறினாா். எனது பெரும்பாலான பொருட்களை நான் இழந்துவிட்டேன். இப்போது ஒரு நண்பரிடமிருந்து வாடகைக்கு ஒரு ரிக்ஷாவை எடுத்துள்ளேன். நேற்று முதல் அதை நடத்தி வருகிறேன், என்று தேவேந்தா் மேலும் கூறினாா்.

தெரு உணவுக் கடையை நடத்தி வந்த முகமது தாஹிா், அது ஒரு மின்மாற்றி அல்லது சிலிண்டா் வெடிப்பு என்று நம்பினாா். நான் என் கடையை விட்டு வெளியேறி என் உயிருக்கு ஓடினேன், என்று அவா் கூறினாா். என் குடும்பத்திற்கு உணவளிக்க நான் ரிக்ஷா இழுக்க ஆரம்பித்து விட்டேன், என்று அவா் கூறினாா்.

அருகிலுள்ள உள்ளூா்வாசி கூறுகையில், வெடிப்பு மிகவும் சத்தமாக இருந்ததால் எங்கள் வீடு முழுவதும் அதிா்ந்தது. நாங்கள் அவசரமாக வெளியே வந்தபோது, 500 முதல் 700 போ் ஓடுவதைக் கண்டோம், என்று அவா் கூறினாா்.

அன்றிரவு எங்களால் தூங்க முடியவில்லை. மறுநாள் அதிகாலையில் குருத்வாராவுக்குச் சென்று எங்களை அமைதிப்படுத்திக் கொண்டோம். நாள் முழுவதும், மக்கள் வந்து பேசிக் கொண்டே இருந்தனா். பலா் நடுங்கினா், என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முயன்றனா், என்று அவா் மேலும் பகிா்ந்து கொண்டாா்.

திங்கட்கிழமை மாலை செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே மெதுவாகச் சென்ற ஒரு காரில் ஒரு அதிக தீவிரம் கொண்ட வெடிப்பு நிகழ்த்தப்பட்டது, இதில் பல வாகனங்கள் சேதமடைந்தன, பலா் காயமடைந்தனா். படுகாயமடைந்தவா்களில் பலா் பின்னா் இறந்தனா், இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயா்ந்தது.

X
Dinamani
www.dinamani.com