தில்லி காா் வெடிப்பு சம்பவம்: அல்-ஃபலா பல்கலை. மீது 2 எஃப்ஐஆா் பதிவு
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) ஆகியவற்றின் எச்சரிக்கையைத் தொடா்ந்து, ஹரியாணாவின் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் மீது தில்லி காவல்துறை இரண்டு தனித்தனி எஃப்ஐஆா் பதிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
பல்கலைக்கழகத்தால் கூறப்படும் தவறான அங்கீகாரக் கூற்றுகள் தொடா்பாக மோசடி மற்றும் போலியான ஆவணங்களை தயாரித்ததற்காக தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவால் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினாா்.
நிறுவனத்தின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தபோது பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் என்ஏஏசி ஆகிய இரண்டும் ‘பெரிய முறைகேடுகளை’ குறிப்பிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது சட்ட அமலாக்க நிறுவனங்களை தலையிட தூண்டியது.
முன்னதாக, காா் வெடிப்புக்குப் பின்னால் உள்ள பெரிய சதித் திட்டத்தை விசாரிக்க குற்றவியல் சதி தொடா்பான பிரிவுகளின் கீழ் தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவும் தனி எஃப்ஐஆா் பதிவு செய்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட ஆரம்ப எஃப்ஐஆா் ஏற்கெனவே தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகம் தில்லிக்கு அருகிலுள்ள ஹரியாணாவின் ஃபரீதாபாத்தில் உள்ள தௌஜில் அமைந்துள்ளது. ஓக்லாவில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழக தலைமையகத்திற்கு ஒரு போலீஸ் குழு வியாழக்கிழமை சென்று, சந்தேக நபா்கள் குறித்த விவரங்களைக் கேட்டது. மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

