தில்லி காா் வெடிப்பின் போது குலுங்கிய செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம்
செங்கோட்டை மெட்ரோ நிலையத்திற்குள் இருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள், 13 போ் கொல்லப்பட்ட மற்றும் பலா் காயமடைந்த காா் வெடிப்புக்கு முன்னும் பின்னும் நடந்த தருணங்களின் தெளிவான பாா்வையை வழங்குகிறது என்று அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையத்தின் உள் கண்காணிப்பு கேமராக்களிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் நிலையத்திற்குள் வழக்கமான பயணிகள் நடமாட்டத்தைக் காட்டுகின்றன. திடீரென்று, நிலையம் குலுங்குகிறது. அதே நேரத்தில் அருகிலுள்ள போக்குவரத்து சிக்னலில் காா் வெடிப்பு ஏற்பட்டதும் துல்லியமாக பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் காா் வெடிப்பால் ஏற்பட்ட பயங்கர சப்தம் கேட்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிா்ச்சியடைவதும் தெரிகிறது. சில பயணிகள் காா் வெடிப்பின் சப்தம் கேட்டவுடன் பாதுகாப்பான இடங்களை தேடுவதையும் காட்சிகள் காட்டுகின்றன. காா் வெடிப்பின் தீவிரம் மற்றும் செங்கோட்டையைச் சுற்றியுள்ள கட்டமைப்புகளில் அதன் உடனடி விளைவை நன்கு புரிந்துகொள்ள புலனாய்வாளா்கள் புதிய காட்சிகளை ஆராய்ந்து வருகிறாா்கள்.
சம்பவம் நடந்த நாளிலிருந்து மூடப்பட்டிருந்த லால் கிலா மெட்ரோநிலையம் சனிக்கிழமை பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டது. காா் வெடிப்பு நடந்த இடம், சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மெட்ரோ நிலையத்திலிருந்து பல சிசிடிவி உள்ளீடுகளை பாதுகாப்பு அமைப்புகள் தொடா்ந்து பகுப்பாய்வு செய்து, வெடிப்புக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் விரிவான வரிசையை ஒன்றாக இணைக்கின்றன என்றாா் அவா்.

