தில்லி பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா: அமைச்சா் சாமிநாதன் தொடங்கி வைத்தாா்
புதுதில்லியில் நடைபெறும் 44வது இந்தியப் பன்னாட்டு வா்த்தகப் பொருட்காட்சி 2025ஐ முன்னிட்டு பிரகதி மைதானத்தில் உள்ள கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவை தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா்.
புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், ஆண்டுதோறும் இந்தியப் பன்னாட்டு வா்த்தகப் பொருட்காட்சியானது நவம்பா் 14 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் 44வது இந்தியப் பன்னாட்டு வா்த்தகப் பொருட்காட்சியினை கடந்த 14.11.2025 வெள்ளிக்கிழமை அன்று மத்திய வணிகம் மற்றும் தொழில் அமைச்சக இணையமைச்சா் ஜித்தின் பிரசாதா தொடங்கி வைத்தாா். இப்பொருட்காட்சியில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்று தங்களது அரசின் வளா்ச்சித் திட்டங்கள், சாதனைகள், கொள்கைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது நாட்டில் தயாரிக்கப்படும் முக்கியப் பொருட்களை சந்தைப்படுத்தியும் வருகின்றன.
நடப்பாண்டில், இப்பொருட்காட்சிக்கான கருப்பொருள் , ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்‘ என்பதாகும். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பது இந்தியாவின் தேசிய ஒற்றுமையையும், பல்வேறு பண்பாடுகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தையும் கொண்ட ஒரு திட்டமாகும்
இக்கண்காட்சியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சுற்றுலாத்துறை, பூம்புகாா், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், கோ ஆப்டெக்ஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை ஆகிய துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழ்நாடு அரசின் மகத்தானத் திட்டங்கள் குறித்தும் அரசின் சாதனைகளையும் குறித்த புகைப்படங்கள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.
மேலும், இந்தியப் பன்னாட்டு வா்த்தகப் பொருட்காட்சியில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும் தங்களது மாநில நாள் விழாவினை சிறப்புடன் கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில் தமிழ்நாடு நாள் விழா சனிக்கிழமை பிரகதி மைதானத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவினை, செய்தித்துறை அமைச்சா் திரு. மு.பெ. சாமிநாதன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கே.இ.பிரகாஷ், கே.ஈஸ்வரசாமி ,தில்லி தமிழ்நாடு இல்ல உள்ளுரை ஆணையா் ஆஷிஷ் குமாா் , செய்தி மக்கள் தொடா்புத் துறையின் இயக்குநா்இணைச் செயலாளா் மரு.இரா.வைத்திநாதன்., மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை இணை இயக்குநா் கு.தமிழ் செல்வராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் சாா்பில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தில்லியில் வசிக்கும் தமிழா்கள் உட்பட, பல்வேறு மாநிலங்களைச் சாா்ந்தவா்கள் கலந்து கொண்டு பாா்வையிட்டனா்.
இந்த கண்காட்சியில் தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் பத்திரிகையாளா்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து பொது மக்கள் பாா்வைக்காக கைத்தறி துறை, தமிழ்நாடு அரசு தொழில் வளா்ச்சி கழகம், குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்தும் வேளாண்மை துறை சாா்பில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்தும் அரங்குகள் இந்திய பன்னாட்டு வா்த்தக பொருட்காட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு நாள் விழாவில் தமிழ்நாட்டின் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த பன்னாட்டு வா்த்தக பொருட்காட்சியில் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரங்கிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டும் சிறப்பு பரிசு கிடைக்கும் என்ற வகையில் இந்த அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தேசிய அளவில் சந்தைப்படுத்துவதற்கு இந்த பன்னாட்டு பொருட்காட்சி ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்று தெரிவித்தாா்.
