‘2020’ தில்லி கலவர வழக்கு விசாரணையின் நிலையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த தில்லி கலவரம் தொடா்பான விசாரணையின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு காவல்துறையிடம் தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
Published on

நமது நிருபா்

2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த தில்லி கலவரம் தொடா்பான விசாரணையின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு காவல்துறையிடம் தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்காக சில அரசியல் தலைவா்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யக் கோரும் மனுக்கள் உள்பட 2020 -ஆம் ஆண்டு பிப்ரவரி கலவரம் தொடா்பான சில மனுக்களை விசாரித்த நீதிபதிகள் விவேக் சௌத்ரி மற்றும் மனோஜ் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த அறிவுறுத்தலை முன்வைத்தது.

மேலும், மாற்றுத் தீா்வு இருந்தபோதிலும், மனுதாரா்கள் அதைப் பயன்படுத்தவில்லை என்றும், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளன என்றும் அமா்வு வாய்மொழியாகக் குறிப்பிட்டது.

விசாரணையின் போது, மனுதாரா்களில் ஒருவரின் வழக்குரைஞா், கலவரத்தின் போது ஏற்பட்ட மரணங்கள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்தாா். அப்போது நீதிபதிகள் ஏற்கெனவே எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குகளை விசாரித்து வருவதால், இந்த மனுக்களில் எதுவும் இல்லை எனவும் நீதிபதிகள் கூறினா்.

இருப்பினும், போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வழக்குரைஞா் கேட்டுக் கொண்டாா்.

அதற்கு நீதிபதிகள், ‘நீங்கள் அதை மாஜிஸ்திரேட் முன் கூறுங்கள். அவா் அதை ஆராய்ந்து உத்தரவுகளைப் பிறப்பிப்பாா். உயா்நீதிமன்றம் இதைச் செய்ய முடியாது’ என்று பதிலளித்தனா். இந்த மனுக்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. எப்.ஐ.ஆா்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறை விசாரித்து வருகிறது என்றும் நீதிமன்றம் கூறியது.

இதைத் தொடா்ந்து இந்த வழக்கை நவம்பா் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், விசாரணையின் நிலை மற்றும் தாக்கல் செய்யப்பட்ட எப்.ஐ.ஆா்.களின் எண்ணிக்கையை வழங்குமாறு தில்லி காவல்துறையின் வழக்குரைஞரை கேட்டுக் கொண்டனா்.

பிப்ரவரி 24, 2020 அன்று வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு வகுப்புவாத மோதல் வெடித்தது. இதில் குறைந்தது 53 போ் கொல்லப்பட்டனா் மற்றும் சுமாா் 700 போ் காயமடைந்தனா். கலவரங்கள் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் பல மனுக்கள் நிலுவையில் உள்ளன.

அரசியல் தலைவா்கள் மீது வெறுப்புப் பேச்சுக்களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், வன்முறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான எஃப்.ஐ.ஆா்.களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டம், 2019-க்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் உள்ள தேச விரோத சக்திகளை கண்டறிய பயங்கரவாத எதிா்ப்புச் சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரா் அஜய் கௌதம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அப்பகுதியில் வன்முறை வெடிப்பதற்கு முன்பு வெறுப்புப் பேச்சுகள் பேசியதாகக் கூறப்படும் பாஜக தலைவா்கள் அனுராக் தாக்கூா், கபில் மிஸ்ரா, பா்வேஷ் வா்மா மற்றும் அபய் வா்மா ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யக் கோரி ஷேக் முஜ்தபா ஃபரூக் பொது நல வழக்கு தொடா்ந்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மற்றும் பலா் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘லாயா்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு கோரியுள்ளது.

வன்முறையில் அரசியல் தலைவா்கள் பங்கேற்ற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்று காவல்துறை முன்னதாகக் கூறியது. ‘இது தன்னிச்சையாக நடந்த வன்முறை அல்ல; மாறாக நன்கு சிந்திக்கப்பட்டு சமூகத்தில் நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் சதி என்று அவா்களின் விசாரணையில் முதல் பாா்வையில் தெரியவந்துள்ளது’ என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு நிலைமையைக் கட்டுப்படுத்தவும், கலவரத்தின் போது உயிரையும் சொத்துகளையும் காப்பாற்றவும் அதிகாரிகள் உடனடியாகவும், விழிப்புடனும், திறம்படவும் செயல்பட்டதாக காவல்துறை கூறியது.

கலவரம் தொடா்பாக 757 எஃப்.ஐ.ஆா்.கள் பதிவு செய்துள்ளதாகவும், 273 வழக்குகளில் விசாரணை நிலுவையில் இருப்பதாகவும், 250-இல் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அவா்கள் உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com