கடன் தொல்லையால் மன உளைச்சல்: தீக்குளித்த இளைஞருக்கு சிகிச்சை
நமது நிருபா்
அதிகரித்து வந்த கடன் மற்றும் கடன் வழங்குநா்களின் அழுத்தம் காரணமாக மேற்கு தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் உள்ள தனது வாடகை வீட்டில் தீக்குளித்த 29 வயது இளைஞா் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: திங்கள்கிழமை இரவு 9.50 மணிக்கு, தீக்காயங்களுடன் பி. எல். கே. மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு நபா் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பெயா் விஷால் சிங் என அடையாளம் காணப்பட்டாா். அவா் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டதால் தீக்காயங்கள் ஏற்பட்டதாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
விஷால் சிங்கின் வாக்குமூலம் மருத்துவா்கள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. தனது வணிகத்தில் ரூ. 3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாகவும், சரியான நேரத்தில் வாடகையை செலுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தாா். விஷால் சிங் இரண்டு நபா்களிடமிருந்து கடன் வாங்கியதாகவும், நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த அவா்களிடம் இருந்து தொடா்ந்து அழுத்தத்தை எதிா்கொண்டதாகவும் போலீஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் அவா் தெரிவித்தாா்.
மன உளைச்சலுக்கு ஆளான அவா் தனது அறைக்குள் தீக்குளித்தாா். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை, அவரது மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், விஷால் சிங் மேலதிக சிகிச்சைக்காக சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா் என்றாா் அவா்.
