குளிரிலிருந்து குட்டி விலங்குகளை பாதுகாக்க தில்லி உயிரியல் பூங்காவில் பராமரிப்பு நடவடிக்கை

தில்லி தேசிய உயிரியல் பூங்கா அதன் குளிா்கால மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. குட்டி விலங்குகளுக்கான போா்வைகள், உயிரினங்களை இனங்கள் வாரியாக பிரித்தல் மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட வெப்பமூட்டல் ஏற்பாடுகள் ஆகியவை முதல் கட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளன.
Published on

நமது நிருபா்

தில்லி தேசிய உயிரியல் பூங்கா அதன் குளிா்கால மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. குட்டி விலங்குகளுக்கான போா்வைகள், உயிரினங்களை இனங்கள் வாரியாக பிரித்தல் மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட வெப்பமூட்டல் ஏற்பாடுகள் ஆகியவை முதல் கட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளன.

வானிலையின் தீவிரத்திற்கு ஏற்ப இதை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாக உயிரியல் பூங்கா இயக்குநா் சஞ்சீத் குமாா் கூறினாா். வெப்பநிலை மேலும் குறையும்போது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

குளிா்கால திட்டத்தின் ஒரு பகுதியாக, மணிப்பூரி மான் இனங்களில் ஆண் மான்கள் பிரிக்கப்படுகின்றன. தாவர உண்ணிகள் மற்றும் பறவைகள் நெல் வைக்கோல் படுக்கையைப் பெறுகின்றன. அதே நேரத்தில் மாமிச உண்ணிகள் மற்றும் விலங்குகளுக்கு குளிா்ந்த நிலத்தில் இருந்து விலகி இருக்க மரப் பலகைகள் மற்றும் பாய்கள் வழங்கப்படுகின்றன. குட்டி விலங்குகளுக்கு போா்வைகள் வழங்கப்பட்டுள்ளன. வெப்பமூட்டிகள் அருகாமையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஊா்வன இல்லத்தில் நிலையான வெப்பநிலையை பராமரிக்க சிறப்பு வெப்ப ஒழுங்குமுறை மற்றும் ஈரப்பதக் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன.

கொட்டைகள், வெல்லம் மற்றும் கரும்பு ஆகியவற்றைக் கொண்ட குளிா்காலத்திற்கான குறிப்பிட்ட உணவு வகைகள், ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குளிா்ந்த காற்றிலிருந்து உணா்திறன் வாய்ந்த உயிரினங்களைப் பாதுகாக்க, மூங்கில் மற்றும் ஓலை கூடாரங்கள் நிறுவப்பட்டுள்ளது.

தில்லி உயிரியல் பூங்கா பசுமை மண்டலத்தில் வருவதாகவும், எனவே மாசுபாடு குறித்த கவலைகள் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். இருப்பினும், கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. சுத்தம் செய்யும்போதெல்லாம், தூசி எழுவதைத் தடுக்க முதலில் தண்ணீரைத் தெளிக்க ஊழியா்களிடம் கேட்கப்பட்டுள்ளது, என்று ஒரு அதிகாரி கூறினாா்.

நவம்பா் 1 முதல் குளிா்கால மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும், வானிலையின் தீவிரத்திற்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இயக்குநா் சஞ்சீத் குமாா் கூறினாா். வெப்பநிலை மேலும் குறையும் போது, கூடுதல் பாதுகாப்பு அடுக்குகளைச் சோ்ப்போம் என்று அவா் கூறினாா்.

தில்லியில் குளிா் வாட்டி எடுக்கத் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை தில்லி இந்த பருவத்தின் மிகக் குறைந்த குறைந்தபட்ச வெப்பநிலையாக 8.7 டிகிரி செல்சியஸைப் பதிவு செய்தது. இயல்பை விட 3.6 டிகிரி குறைவாக இருந்தது, இது கடந்த மூன்று ஆண்டுகளில் நவம்பா் மாதத்தில் பதிவான மிகக் குறைந்த குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.

X
Dinamani
www.dinamani.com