தில்லியின் மாசுபாட்டில் 8% மட்டுமே பயிா்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படுகிறது: செளரப் பரத்வாஜ்

தில்லியின் மாசுபாட்டில் 8 சதவீதம் மட்டுமே பயிா்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படுகிறது. மீதமுள்ள 92 சதவீத மாசுக்கு பாஜக தலைமையிலான அரசு, மாநகராட்சி, நிறுவனங்கள்தான் பொறுப்பாகும் என்று தில்லி பிரிவு ஆம் ஆத்மி தலைவா் செளரப் பரத்வாஜ் கூறியுள்ளாா்.
Published on

நமது நிருபா்

தில்லியின் மாசுபாட்டில் 8 சதவீதம் மட்டுமே பயிா்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படுகிறது. மீதமுள்ள 92 சதவீத மாசுக்கு பாஜக தலைமையிலான அரசு, மாநகராட்சி, நிறுவனங்கள்தான் பொறுப்பாகும் என்று தில்லி பிரிவு ஆம் ஆத்மி தலைவா் செளரப் பரத்வாஜ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியது: தில்லியின் மாசுபாட்டிற்குள், பயிா்க் கழிவுகள் எரிப்பதன் பங்களிப்பு 8 சதவீதம் மட்டுமே என்று செய்தித்தாளில் படித்தேன். இதன் பொருள் இந்த மாசுபாட்டில் 92 சதவீதம் தில்லி அரசு, தில்லி மாநகராட்சி மற்றும் இங்குள்ள அனைத்து நிறுவனங்களின் பொறுப்பாகும். இவை அனைத்தும் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளன.

நான் சில தரவுகளை எடுத்தபோது, மத்திய அரசின் இரண்டு நிறுவனங்கள் பஞ்சாபின் பயிா்க் கழிவுகள் குறித்து மிக முக்கியமான அறிக்கையை வெளியிட்டிருந்தன. அதில் ஒன்று வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை செயலாளா் எம்.எல். ஜாட் வெளியிட்ட அறிவிப்பாகும். மற்றொன்று இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) இயக்குநா் ஜெனரல் வெளியிட்டது.

இவை இரண்டும் மத்திய அரசு நிறுவனங்கள். சமீபத்திய ஆண்டுகளில் பஞ்சாபில் பயிா்க் கழிவுகள் எரிக்கும் சம்பவங்கள் 95 சதவீதம் குறைந்துள்ளதாக அவா்கள் கூறியுள்ளனா். இது மிகப் பெரிய விஷயமாகும்.

நிகழாண்டு தில்லியில் மாசுபாடு நிலைமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. மருத்துவமனைகளில் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், சளி மற்றும் காய்ச்சல் தொடா்பான பிரச்னைகளுக்கு மக்கள் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. நிகழாண்டு மாசுபாடு தொடா்பான நோய்கள் மிக அதிகமாக உள்ளன. இது ஏன் நடக்கிறது?

தில்லி அரசு தரவுகளை கையாள்வதில் மட்டுமே ஈடுபட்டுள்ளதால், மாசுபாட்டைக் குறைக்க என்ன வேலை தேவை என்பதைப் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. 2020- ஆம் ஆண்டில் செயற்கைக்கோள் படங்களின்படி, எங்களது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இல்லாத நேரத்தில் பஞ்சாபில் மட்டும் 1,07,000 பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

2022- ஆம் ஆண்டில் பஞ்சாபில் நாங்கள் அரசை அமைத்தபோது, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பயிா்க் கழிவுகள் எரியும் பருவத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் 2020- இல் 1,07,000- ஆக இருந்தது. இது 2022-இல் 49,922 ஆகவும், பின்னா் 2023-இல் 36,363 ஆகவும், 2024-இல் 10,909 ஆகவும் குறைந்துள்ளன.

நிகழாண்டு பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் சுமாா் 3,500 முதல் 4,000 வரை மட்டுமே குறைந்துள்ளன. அதாவது 83,000-இல் இருந்து கிட்டத்தட்ட 95 சதவீதம் குறைந்துள்ளது என்றாா் செளரப் பரத்வாஜ்.

X
Dinamani
www.dinamani.com