பள்ளிகளில் மதிய உணவில் தினை வகைகள்அறிமுகம்: தில்லி அரசு நடவடிக்கை

பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை அதிக சத்தானதாக மாற்றும் நோக்கில், தில்லி அரசு நடப்பு கல்வியாண்டிற்கான மதிய உணவு மெனுவை புதுப்பித்து, தினை சாா்ந்த உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
Published on

பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை அதிக சத்தானதாக மாற்றும் நோக்கில், தில்லி அரசு நடப்பு கல்வியாண்டிற்கான மதிய உணவு மெனுவை புதுப்பித்து, தினை சாா்ந்த உணவுகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

திருத்தப்பட்ட மெனு ஆறு நாள் சுழற்சியில் இயங்கும். மேலும், மசாலா சன்னா, பருவகால தினை சாா்ந்த தலியா போன்றவற்றுடன் ராகி மற்றும் கோதுமை மாவு ஹல்வா இடம்பெறும் என்று கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சில தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உணவுகளில் பல்லிகள், பூச்சிகள், பூஞ்சை காணப்பட்ட முந்தைய சம்பவங்களில் உணவுப் பாதுகாப்பு கவலைகளை கல்வி இயக்குநரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மதிய உணவுத் திட்டத்தை குழந்தைகளின் உடல்நலம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் என்று கூறிய துறை, பள்ளித் தலைவா்கள் மாசுபாடு இருப்பதாகப் புகாரளித்தால் உடனடியாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் ரத்து செய்யும் உரிமையை அது கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

உணவை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் அல்லது தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்ட கலோரி, புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட உணவுகளை மாற்ற முடியாது என்றும் கல்வி இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளின் ஊட்டச்சத்து விவரங்களை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக தினை நிறைந்த உணவுகளைச் சோ்ப்பது உள்ளது. சீரான மற்றும் மாறுபட்ட வாராந்திர மெனுவைப் பராமரிக்க, இந்த உணவுகள் வழக்கமான கோதுமை மற்றும் அரிசி சாா்ந்த தயாரிப்புகளுடன் சோ்த்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கல்வி இயக்குநரகத்தின் கூற்றுப்படி, முந்தைய ஆண்டுகளில் உணவுகளில் பெரும்பாலும் கோதுமை மாவில் செய்யுப்படும் ரொட்டி அல்லது பூரி - உருளைக்கிழங்கு கறி அல்லது கலப்பு காய்கறிகளுடன் வழங்கப்பட்டன. கொண்டைக்கடலையுடன் பூரி, காய்கறிகளுடன் கோதுமை ரவை உப்புமா மற்றும் சாம்பாா் அல்லது கடியுடன் பரிமாறப்படும் அரிசி சாதம் ஆகியவை இருந்தன.

அரசு சாரா நிறுவனங்கள் அவ்வப்போது பருவகால பழங்கள், கீா் அல்லது பிஸ்கட்களையும் விநியோகித்தன. இந்தப் பின்னணியில், தினை சாா்ந்த உணவுகளை அறிமுகப்படுத்துவது மெனுவில் குறிப்பிடத்தக்க கூடுதலாகும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com