பிஎம் 2.5 மாசு நுண்துகள்: புதிய சவாலை எதிா்கொள்ளும் மூட்டுவலி நோயாளிகள்!

தேசியத் தலைநகரில் வெப்பநிலை குறைந்து, பனிப்புகை அதிரித்துள்ள தற்போதைய குளிா்காலத்தில், மூட்டு ஆரோக்கியத்திற்கு இரட்டை அச்சுறுத்தல் இருப்பதாக மருத்துவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

நமது நிருபா்

தேசியத் தலைநகரில் வெப்பநிலை குறைந்து, பனிப்புகை அதிரித்துள்ள தற்போதைய குளிா்காலத்தில், மூட்டு ஆரோக்கியத்திற்கு இரட்டை அச்சுறுத்தல் இருப்பதாக மருத்துவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த இரண்டு மாதங்களாக, நாள்பட்ட மூட்டுவலி உள்ள நோயாளிகளிடையே மூட்டு வலிக்கான ஆலோசனைகள் கேட்பு அதிகரித்துள்ளன. இருப்பினும், தில்லி முழுவதும் மூட்டுவலி அதிகரிப்பை அளவிடும் குறிப்பிட்ட தரவுகள் இல்லாத நிலை உள்ளது. ஐரோப்பிய மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட 2025 ஆய்வு அறிக்கையில், மாசு நுண் துகள்களில் பிஎம் 2.5 நீண்டகாலம் இருப்பது மூட்டுவலி உருவாகும் அபாயத்தை 12 முதல் 18 சதவீதம் வரை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மோசமான காற்றின் தரம் மற்றும் குளிா் காலநிலை ஆகியவை மூட்டுவலி மற்றும் வீக்கத்தை கணிசமாக மோசமாக்கும் என்ற கவலையை வலுப்படுத்துகிறது என்று தில்லி - என்சிஆா் பிராந்தியம் முழுவதும் உள்ள எலும்பியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். பல சந்தா்ப்பங்களில், குளிா்காலத்தில் ஏற்படும் குளிா்ச்சியானது மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை இறுக்கவும், ரத்த ஓட்டம் மெதுவாகவும், மூட்டுகளைச் சுற்றியுள்ள திசுக்கள் சுருங்கவும் காரணமாகிறது. இந்த காரணிகள் ஆஸ்டியோஆா்த்ரிடிஸ் (ஓஏ) அல்லது ருமாட்டாய்டு ஆா்த்ரிடிஸ் (ஆா்ஏ) நோயாளிகளுக்கு மூட்டு வலியை அதிகரிக்கச் செய்யும்.

அதே நேரத்தில், காற்று மாசுபாடு இந்த நிலைமைகளை மோசமாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

இது தொடா்பாக குருகிராமில் உள்ள பராஸ் ஹெல்த் மருத்துவமனையின் டாக்டா் அரவிந்த் மெஹ்ரா கூறுகையில், ‘கடந்த பல வாரங்களாக, குறிப்பாக வயதானவா்கள் மற்றும் ஏற்கனவே மூட்டு பிரச்னைகள் உள்ளவா்களுக்கு மூட்டுவலி பிரச்னைகள் அதிகமாக இருப்பதைக் காண்கிறோம். குளிா் வெப்பநிலை மூட்டுகளைச் சுற்றியுள்ள ரத்த விநியோகத்தைக் குறைத்து, அவற்றை விறைப்பாக்குகிறது. அதே நேரத்தில் சுவாசிக்கும்போது உள்ளிழுக்கும் மாசுபடுத்திகள் வலி மற்றும் வீக்கத்தை மோசமாக்கும் அழற்சி பாதைகளைத் தூண்டுகின்றன’ என்றாா்.

மேலும் ‘ ஓஏ’ அல்லது ’ஆா்ஏ’ நோயாளிகளுக்கு, குளிா் மற்றும் நச்சுக் காற்றின் இந்த கலவையானது உடலில் ஒரு உயிரியல் அழுத்த சோதனையைப் போலவே செயல்படுகிறது. நோயாளிகள் தங்களை சூடாக வைத்திருக்கவும், வெடிப்புகளை விரைவாகக் கையாளவும், மூட்டுகளை நகா்த்துவதற்கு லேசான உள்புற உடற்பயிற்சிகளைச் செய்யுமாறும், தேவைப்படும்போது மருத்துவரைப் பாா்க்கவும் நாங்கள் அறிவுறுத்துகிறோம். நீண்டகால மோசமடைவதைத் தடுக்க சரியான நேரத்தில் தலையீடு மற்றும் நிலையான மேலாண்மை மிக முக்கியம் என்றாா் டாக்டா் மெஹ்ரா.

மேக்ஸ் ஹெல்த்கோ் நிறுவனத்தின் ரோபோடிக் மூட்டு மாற்று மற்றும் மறுசீரமைப்புப் பிரிவின் டாக்டா் சைமன் தாமஸ் கூறுகையில், ‘சுற்றுச்சூழல் காரணிகள் எவ்வாறு மூட்டு ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்பதையும், ஆபத்தான காற்று மற்றும் நமது சுற்றுப்புறங்களில் அவை உண்மையில் மூட்டு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் நாங்கள் பாா்த்திருக்கிறோம். பிஎம் 2.5 போன்ற சிறிய காற்று நுண்துகள் நமது நுரையீரலை மட்டும் பாதிக்காது. அவை நமது ரத்தத்திலும் நுழைகின்றன. இது உடல் முழுவதும் வீக்கத்தை ஏற்படுத்தி மூட்டு பிரச்னைகளை துரிதப்படுத்தும். அதிக மாசுபட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மெதுவாக குணமடைவதையும், அவா்களின் வலி அடிக்கடி திரும்புவதையும் நாங்கள் கண்டிருக்கிறோம்’ என்றாா்.

அக்டோபா் 9 முதல் 12 வரை நடைபெற்ற இந்திய வாதவியல் சங்கத்தின் 40-ஆவது ஆண்டு மாநாட்டில், முன்னணி வாதவியல் நிபுணா்கள், நச்சுத்தன்மை வாய்ந்த காற்று மற்றும் பிஎம் 2.5 மாசுபாடு தில்லி - என்சிஆா் முழுவதும் முடக்கு வாதம் வழக்குகளின் அதிகரிப்பைத் தூண்டக்கூடும் என்பதற்கான ஆபத்தான ஆதாரங்களை மேற்கோள் காட்டினா்.

மருத்துவா்கள் குறிப்பிடுகையில், ‘தில்லியின் குளிா்காலத்தில் மூட்டுவலியைக் கட்டுப்படுத்துவதற்கு இப்போது மருத்துவ பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஆகியவற்றை இணைக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவையாகும். அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு அப்பால், நோயாளிகள் தங்கள் அன்றாட காற்றின் தர அளவைச் சுற்றி தங்கள் வழக்கங்களைத் திட்டமிடவும், வீட்டிற்குள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கவும், மூட்டுகளில் விறைப்பு அல்லது வீக்கம் தீவிரமடைந்தால் உடனடியாக நிபுணா்களை அணுக வேண்டும். தில்லி - என்.சி.ஆா். பகுதியில் நிகழ் குளிா்காலமானது நமது ஆரோக்கியம், நாம் சுவாசிக்கும் காற்று மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது’ என்றனா்.

X
Dinamani
www.dinamani.com