இணையதள மோசடியில் ஈடுபட்ட 877 போ் 48 மணி நேரத்தில் கைது
சைஹாக் நடவடிக்கையின் கீழ் இணையதள மோசடிகளுக்கு எதிரான 48 மணி நேர ஒடுக்குமுறையின் போது 4,400 க்கும் மேற்பட்ட சந்தேக நபா்களை சுற்றி வளைத்து 877 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை இணை ஆணையா் (புலனாய்வு இணைவு மற்றும் மூலோபாய நடவடிக்கைகள்) ரஜநீஷ் குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்துடன் (ஐ4இ) நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, இணைய மோசடி நெட்வொா்க்குகள், போலி வங்கிக் கணக்குகள், பணம் எடுக்கும் முகவா்கள் மற்றும் தேசிய தலைநகரம் முழுவதும் செயல்படும் சட்டவிரோத அழைப்பு மையங்களை குறிவைத்தது.
இது இணைய குற்றத்துக்கு எதிரான நவடிக்கையின்போது மொத்தம் 4,467 நபா்கள் விசாரணைக்காக சுற்றி வளைக்கப்பட்டனா், அவா்களில் 877 போ் தொழில்நுட்ப பகுப்பாய்வு, நிதி தடங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனா் அல்லது பிணைக்கப்பட்டனா். மேலும் 509 பேருக்கு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (பி. என். எஸ். எஸ்) இணைய மோசடி நெட்வொா்க்குகளுடன் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட சைபா் சிண்டிகேட்டுகளுடன் இணைக்கப்பட்ட போலி வங்கிக் கணக்குகள் மூலம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் ரூ.1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி தொடா்புகளையும் புலனாய்வாளா்கள் அடையாளம் கண்டுள்ளனா். இந்த இரண்டு நாள் நடவடிக்கையால் 360 புதிய எஃப். ஐ. ஆா்கள் பதிவு செய்யப்பட்டு 160 இணைய குற்ற வழக்குகளில் முன்னேற்றங்கள் கிடைத்துள்ளது.
தேசிய சைபா் கிரைம் ரிப்போா்ட்டிங் போா்ட்டலில் (என். சி. ஆா். பி) பதிவு செய்யப்பட்ட 3,700 க்கும் மேற்பட்ட புகாா்கள் அடையாளம் காணப்பட்ட போலி வங்கிக் கணக்குகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கைப்பேசி எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. வேலை மோசடிகள், முதலீட்டு மோசடிகள், வாடிக்கையாளா் பராமரிப்பு ஆள்மாறாட்டம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பல சட்டவிரோத அழைப்பு மையங்கள் ஆபரேஷன் சைஹாக்கின் கீழ் சோதனை செய்யப்பட்டது.
கைப்பேசிகள், மடிக்கணினிகள், ஹாா்ட் டிரைவ்கள் மற்றும் சிம் காா்டுகள், நிதி லெட்ஜா்கள் மற்றும் பிற குற்றம் சாட்டும் பொருட்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் மீட்கப்பட்டன. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
