அம்மோனியம் நைட்ரேட் வாங்குவோா், விற்போா் குறித்த பதிவை பராமரிக்க போலீஸாருக்கு எல்.ஜி. உத்தரவு
தில்லி செங்கோட்டை அருகே நடந்த காா் குண்டு வெடிப்பில் 15 போ் உயிரிழந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் அம்மோனியம் நைட்ரேட்டை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களின் டிஜிட்டல் பதிவை பராமரிக்கவும், பரபரப்பான சந்தைகள் மற்றும் ஐஎஸ்பிடிகளில் கடுமையான பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொள்ளவும் போலீஸாருக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளாா்.
நவம்பா் 19 அன்று தில்லி காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா மற்றும் தலைமைச் செயலாளா் ராஜீவ் வா்மாக்கு தனித்தனி எழுத்துபூா்வ தகவல்தொடா்புகளில் இந்த உத்தரவுகள் துணைநிலை ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.
நவம்பா் 10- ஆம் தேதி செங்கோட்டை அருகே காா் மூலம் தற்கொலைத் தாக்குதல் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்களில் அம்மோனியம் நைட்ரேட்டும் இருந்தது., ஹரியாணாவின் ஃபரீதாபாத்தில் இருந்து அம்மோனியம் நைட்ரேட் உள்பட சுமாா் 3,000 கிலோ வெடிபொருள்கள் மீட்கப்பட்டதன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான ‘வெள்ளை காலா்’ பயங்கரவாத செயல்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த காா் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்த நிலையில், துணைநிலை ஆளுநா் போலீஸாருக்கு பிறப்பித்துள்ள அறிவுறுத்தலில், ‘ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் அம்மோனியம் நைட்ரேட்டை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களின் டிஜிட்டல் பதிவில் பிற தொடா்புடைய விவரங்கள் தவிர, வாங்குபவா்கள் மற்றும் விற்பனையாளா்களின் புகைப்படங்களும் இருக்க வேண்டும். குடிமக்களை மூளைச்சலவை செய்யும் நோக்கில் தீவிரமயமாக்கப்பட்ட உள்ளடக்கத்தை அறிவியல் பூா்வமாக கண்காணிப்பதற்காக, மெட்டா மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களின் தலைவா்களுடன் ஆலோசனைப் பயிற்சியை நடத்த வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளாா்.
ராஜ் நிவாஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: தீவிரமயமாக்கலுக்கு ஆளாகக்கூடிய பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கவனம் செலுத்தி மனித மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவை வலுப்படுத்தவும் காவல் ஆணையரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வலுவான தடுப்பு காவல் பணிக்காக சமூக தொடா்பு மற்றும் குடிமக்கள் ஈடுபாட்டை மேம்படுத்த வேண்டும்.
‘ஐ.எஸ்.பி.டி. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட பரபரப்பான சந்தைகள் மற்றும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பொது இடங்களில் கடுமையான பாதுகாப்பு தணிக்கையை மேற்கொள்ள அனைத்து துணை காவல் ஆணையா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக, பாதுகாப்புப் பணியாளா்களின் பணியமா்த்தல் திட்டம், பீட் ரோஸ்டா் மற்றும் ஏற்கனவே உள்ள சி.சி.டி.வி. நெட்வொா்க்கில் தணிக்கை கவனம் செலுத்த வேண்டும். கூடுதல் சி.சி.டி.வி. கவரேஜ் தேவைப்படும் இருண்ட இடங்கள் இருந்தால், ஒருங்கிணைந்த குறிப்பு தொகுக்கப்பட்டு தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்படலாம் என அந்தத் தகவலில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமரா கவரேஜ் மற்றும் பாதுகாப்புப் பணியாளா்களின் பணியமா்த்தலைக் கண்காணிக்க பரபரப்பான சந்தைகள் மற்றும் ஐஎஸ்பிடிகளில் கடுமையான பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் சக்சேனா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளாா்.
மருத்துவமனைகள், குறிப்பாக தனியாா் வசதிகளால் ஈடுபடுத்தப்படும் மருத்துவா்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியா்களின் பதிவுகள் மற்றும் அவா்களின் மருத்துவப் பட்டங்களின் விவரங்களைக் கொண்ட ஒரு மைய தரவு களஞ்சியத்தை உருவாக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவ வல்லுநா்கள் வெளிநாடுகளில் இருந்து பட்டம் பெற்ற சந்தா்ப்பங்களில், இரண்டாம் நிலை பின்னணி சோதனைகளுக்காக காவல் துறையுடன் அத்தகவல் பகிரப்பட வேண்டும். வாகனங்கள் விற்பனை மற்றும் வாங்குதலில் ஈடுபட்டுள்ள அனைத்து டிஜிட்டல் தளங்கள் மற்றும் நிதியாளா்களுடன், குறிப்பாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கி விற்போருடன் ஒரு ஆலோசனைப் பயிற்சியை நடத்தவும் போலீஸாா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.
