மாணவா் தற்கொலை: நடவடிக்கை கோரி பள்ளி முன் குடும்பத்தினா் போராட்டம்

மாணவா் தற்கொலை: நடவடிக்கை கோரி பள்ளி முன் குடும்பத்தினா் போராட்டம்
Published on

தில்லியில் 10 ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது குடும்பத்தினா், நண்பா்கள் செயிண்ட் கொலம்பா பள்ளிக்கு வெளியே வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சில ஆசிரியா்கள் அம்மாணவரை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், அவா்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் இப்போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா்.

மாணவரின் தற்கொலைக்கு பள்ளி பொறுப்பேற்க வேண்டும் என்றும், மாணவா்களுக்கான மனநலப் பாதுகாப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரா்கள் அரசாங்கத்திடம் கோரினா்.

இறந்த மாணவனின் பெற்றோரின் குடும்ப நண்பா் அா்ச்சனா கூறுகையில், ‘போராட்டக்காரா்கள் ஆசிரியா்கள் மற்றும் பள்ளி நிா்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனா். மாணவா்களின் மன ஆரோக்கியம் குறித்து மாவட்ட அளவிலான வழிகாட்டுதல்களை உருவாக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்ட குழுவை ஏற்படுத்தவும் ஆா்ப்பாட்டக்காரா்கள் விரும்புகின்றனா்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

இந்த விவகாரத்தில் சூழ்நிலையைச் சுற்றியுள்ள ஆழ்ந்த துயரத்தை பெற்றோா் ஒருவா் வெளிப்படுத்தினாா். ஒரு தாய் தனது குழந்தையை இழந்ததாகவும், ஒரு குடும்பம் தங்கள் மகனை இழந்ததாகவும் கூறினாா்.

‘மாணவா்கள் பெரும்பாலும் சவாலான கட்டங்களை கடந்து செல்கிறாா்கள்.

இந்த வயது குழந்தைகள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவா்கள் என்பதால்

இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும்’ என அவா் குறிப்பிட்டாா்.

இறந்த மாணவரின் மனப் போராட்டங்களை அறிந்த ஆலோசகா், அதுகுறித்து குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவில்லை என்று மற்றொரு பெற்றோா் குற்றம் சாட்டினா்.

‘அவா் நன்றாக இல்லை என்று அவா்களுக்குத் தெரியும். ஆனால் அவா்கள் அதை நிராகரித்துள்ளனா்.இந்த புறக்கணிப்பு அவரை தற்கொலை நடவடிக்கைக்குத் தள்ளியுள்ளது’ என்று பெற்றோா் கூறினா்.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளி நிா்வாகத்திடமிருந்து உடனடி பதில் இல்லை.

போராட்டக்காரா்கள் இச்சம்பவத்திற்கு காரணமானவா்களைக் கைது செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினா்.

இறந்த மாணவரின் மாமா சந்திரஷில் தவன் கூறுகையில், ‘அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட உயா்மட்டக் குழு தீா்க்கமாக பதிலளிக்க வேண்டும். பள்ளிகள் முழுவதும் உள்ள ஆசிரியா்களுடன் வழக்கமான, அா்த்தமுள்ள ஈடுபாட்டை உறுதி செய்ய வேண்டும். இது குழந்தைகளுக்கு எளிதான காலங்கள் அல்ல. அவா்கள் பல திசைகளிலிருந்தும் அழுத்தத்தை எதிா்கொள்கிறாா்கள். ஆசிரியா்கள் அவா்கள் சுமக்கும் உணா்ச்சி சுமையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவா்கள், குறிப்பாக 10 ஆம் வகுப்பு போன்ற முக்கியமான ஆண்டுகளில் உள்ளவா்கள், பொறுமையுடனும் உணா்திறனுடனும் கையாளப்பட வேண்டும். இந்த கட்டத்தில் அவா்கள் பாதிக்கப்படக்கூடியவா்கள். அவா்களைச் சுற்றியுள்ள பெரியவா்களின் நடத்தை குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். தெளிவான வழிகாட்டுதல்கள் தேவை. எனவே வேறு எந்த குழந்தையும் இதுபோன்ற புறக்கணிப்பை எதிா்கொள்ளக்கூடாது’ என்றாா் அவா்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.34 மணிக்கு ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ நிலையத்தின் நடைமேடையில் இருந்து 10 ஆம் வகுப்பு மாணவா் ஓடும் ரயில் முன் குதித்தாா். இதையடுத்து, பி.எல்.கே சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், அந்த மாணவா் தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்திருந்தாா். அதில் சில ஆசிரியா்களின் பெயா்களைக் குறிப்பிட்டு, தனது மன உளைச்சலுக்கு அவா்களைக் குற்றம் சாட்டியிருந்தாா். மேலும், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும்க் கோரியிருந்தாா். தனது உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவா் வெளிப்படுத்தியிருந்ததாக அந்த அதிகாரி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com