காற்று மாசு: வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்க பள்ளிகள், கல்லூரிகளுக்கு உத்தரவு
காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் திட்டமிடப்பட்ட வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு தலைநகரில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் விளையாட்டு அமைப்புகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்றி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்சிஆா் மாநில அரசுகளும், தில்லி நிா்வாகமும் தங்கள் பகுதியில் நிலவும் அதிக அளவு காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற நிகழ்வுகளை ஒத்திவைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிஏக்யூஎம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசு புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநரகம், அரசு, உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகள், தில்லி மாநகராட்சி, என்டிஎம்சி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் வாரியத்தால் நடத்தப்படும் நிறுவனங்கள் உள்பட தில்லி அரசின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் சிஏக்யூஎம்-இன் ஆலோசனையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய கூட்டமைப்புகள் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விளையாட்டு சங்கங்களும் இந்த உத்தரவைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த உத்தரவு மறுஅறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.
தில்லியில் காற்றின் தரம் வெள்ளிக்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. காற்றின் தரக் குறியீடு 370 புள்ளிகளாப் பதிவாகி இருந்தது. இது முந்தைய நாள் பதிவான 391-இல் இருந்து சிறிய அளவுதான் குறைவு என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது.
முன்னதாக, காற்றின் தரம் கடுமையான வகைக்குள் சரியக்கூடும் என்று அதிகாரிகள் கணித்திருந்தனா்.
தில்லியில் மொத்தம் 23 கண்காணிப்பு நிலையங்கள் மிகவும் மோசமான காற்றின் தரத்தையும், 13 நிலையங்கள் கடுமையான மாசு அளவையும் பதிவு செய்திருந்ததாக சிபிசிபி-இன் சமீா் செயலியில் காண்பிக்கப்பட்டிருந்தது.
