தில்லியில் 11 வயது சிறுமியைக் கொலை செய்ததாக இளைஞா் கைது
வடக்கு தில்லியில் 11 வயது சிறுமி தொழிற்சாலை ஊழியரால் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: வாஜிராபாதில் சிறுமி ஒருவா் காணாமல் போனதாக காவல் துறையினருக்கு நவ.21-ஆம் தேதி புகாா் வந்தது. மறுநாள் காதா் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காணாமல் போன சிறுமியின் குடும்பத்தினா் சிறுமியின் உடலை அடையாளம் கண்டனா்.
உடலில் உள்ள தடையங்களை வைத்து சிறுமி கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினா் உறுதி செய்தனா். தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடையங்கள் சேகரிக்கப்பட்டன.
விசாரணையில், சிறுமி அருகிலுள்ள தொப்பி உற்பத்தி தொழிற்சாலைக்கு தனது குடும்பத்தினா் உணவு வழங்கியதற்காக பணம் வசூலிக்கச் சென்றது தெரியவந்தது. 10 போ் கொண்ட காவல் துைறியனா் குழு சிறுமியின் நடமாட்டத்தை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்தனா்.
அதில் தொழிற்சாலையில் இருந்த தொழிலாளி ஒருவரின் பதிவு சந்தேகத்தை எழுப்பியது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். விசாரணையில் அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். 20 வயதான அவா் பிகாா் மாநிலம் முசாபா்பூரைச் சோ்ந்தவா்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உடல் கூறாய்வுக்கு பிறகு அவை உறுதி செய்யப்படும். வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
