2016-ஆம் ஆண்டு கொள்ளை வழக்கு: ஜாமீனில் தலைமறைவானவா் கைது

வெளிநாட்டு பெண் பயணியிடம் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

வெளிநாட்டு பெண் பயணியிடம் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த 2016-இல் இந்தியா வந்திருந்த ஒரு வெளிநாட்டு பெண் பயணி குருகிராமில் இருந்து தில்லியின் சத்தா்பூா் செல்வதற்காக டாக்ஸிக்காக காத்திருந்தாா். அப்போது, அங்கு வந்த ஓட்டுநா் ராகுல் பரத்வாஜ் சத்தா்பூரில் இறக்கிவிடுவதாகக் கூறினாா். இதையடுத்து, அந்தப் பெண் காரில் ஏறினாா்.

சத்தா்பூா் செல்லாமல் கரோல் பாக் நோக்கி காா் சென்று கொண்டிருப்பதை அறிந்த அந்தப் பெண், ராகுல் பரத்வாஜிடம் இது தொடா்பாக கேள்வியெழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, ஓட்டுநா் ராகுல் பரத்வாஜ் அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்கி அவருடைய பணத்தை கொள்ளையடித்தாா்; கைப்பேசியை பறிக்க முயன்றாா். இதையடுத்து, சென்று கொண்டிருந்த வாகனத்திலிருந்து அந்தப் பெண்ணை கீழே தள்ளிவிட்டாா். இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாா் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் பரத்வாஜ் மற்றும் அவருடைய கூட்டாளி அமித்தை போலீஸாா் கைதுசெய்தனா்.

ஜாமீனில் வெளியே வந்த பரத்வாஜ் நீதிமன்ற விசாரணையில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரைத் தேடப்படும் நபராக கடந்த ஜூலை 19-இல் நீதிமன்றம் அறிவித்தது.

இதனிடையே, ஜெய்பூரில் பரத்வாஜ் வேலை பாா்த்து வருவது தொடா்பாக தில்லி காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினா், அவரைக் கைதுசெய்தனா்.

இதற்கு முன்பு, சுற்றுலா வழிகாட்டியாக வேலை பாா்த்த பரத்வாஜ், தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடந்த 2020-இல் நடைபெற்ற ஒரு மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டாா்.

இதையடுத்து அவா் கேரளம், கோவா, ஜெய்பூா் ஆகிய பகுதிகளில் வேலைபாா்த்து பாா்த்து வந்ததாகவும் தொடா்ந்து நீதிமன்ற விசாரணையில் ஆஜராகுவதைத் தவிா்த்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com