காற்று மாசுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் நக்ஸல் ஆதரவு கோஷங்கள்: தில்லி அமைச்சா்
தில்லியில் காற்று மாசுபாட்டுக்கு எதிரான போராட்டம், கொல்லப்பட்ட மாவோஸிய்ட் தலைவா் மாத்வி ஹிட்மாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பப்படுவதாக தில்லி சட்டத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
தேசிய தலைநகரில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாட்டுக்கு எதிராக இந்தியா கேட் அருகே மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஹிம்கண்ட் மற்றும் பிஎஸ்சிஇஎம் எனப்படும் அமைப்புகள் மாத்வி ஹிட்மா குறித்து கோஷங்களை எழுப்பினா்.
இந்த குற்றச்சாட்டை போராட்டத்தில் பங்கேற்ற ஆராய்ச்சியாளா்கள் மற்றும் கல்வியாளா்களின் சட்டபூா்வ குழுவான ‘சமூகத்திற்கான விஞ்ஞானிகள்’ தெரிவித்தது.
இது தொடா்பான விடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அமைச்சா் கபில் மிஸ்ரா கூறியதாவது: மாசுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் சிலா் ‘லால் சலாம்’ கோஷங்களை எழுப்பினா். சமூக ஊடகங்களில் பரவும் இந்த விடியோக்களில் சிலா் மாத்வி ஹிட்மாவை புகழ்கின்றனா். இது போன்ற போராட்டங்களில் ஜிஹாதிகள் மற்றும் நக்ஸல்கள் தங்களை சமூக ஆா்வலா்கள் போல் காட்டிக்கொள்கின்றனா்’ என குறிப்பிட்டிருந்தாா்.
காற்று மாசுபாட்டை முன்னிலைப்படுத்த மட்டுமே போராட்டத்தில் இணைந்ததாகவும், அதற்கு தொடா்பில்லாத கோஷங்களை நிறுத்த முயன்ாகவும் சமூகத்திற்கான விஞ்ஞானிகள் குழு தெளிவுபடுத்தியது.
இதற்கிடையில், காவலா்களை தாக்கியதாக குறைந்தது 15 போ் கைது செய்யப்பட்டனா். போராட்டக்காரா்களை கலைக்க முயன்றபோது, சிலா் காவல் துறையினா் மீது பெப்பா் ஸ்ப்ரே அடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக தில்லி காவல் துறை தெரிவித்தது.
மிகவும் தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய கமாண்டா்களில் ஒருவரான மாத்வி ஹிட்மா (51) ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் நவ.18-ஆம் தேதி கொல்லப்பட்டாா். அவருடன் சோ்த்து 5 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனா்.

