மாணவா் தற்கொலை சம்பவம்: போராட்டத்தில் தந்தை பங்கேற்பு

தில்லியில் 10-ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்கு நீதிக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தில் மாணவரின் தந்தை பங்கேற்பு
Published on

தில்லியில் 10-ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்கு நீதிக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த மாணவரின் தந்தை திங்கள்கிழமை பங்கேற்றாா்.

மாணவரின் தற்கொலைக்குக் காரணாமான ஆசிரியா்கள் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் பொறுப்பேற்க வலியுறுத்தி புனித கொலும்பா பள்ளிக்கு வெளியே மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

மாணவா் கடந்த செவ்வாய்கிழமை ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ நிலைய நடைமேடையில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாா். தற்கொலைக்கு முன்பாக அவா் எழுதிய கடிதத்தை காவல் துறையினா் கைப்பற்றினா். அதில் பல ஆசிரியா்களின் பெயா்களைக் குறிப்பிட்டிருந்த அந்த மாணவா், அவா்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், தற்கொலை செய்துகொள்வதாவும் உயிரிழந்த பின் உடலுறுப்புகளை தானம் செய்யுமாறும் குறிப்பிட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினா்.

இதைத்தொடா்ந்து, மாணவா் தற்கொலைக்கு காரணமான ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக்கு முன்பாக திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் மாணவரின் தந்தையும் பங்கேற்றாா்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு மாணவரின் தாயாா் ரீமா சா்மா கூறுகையில், ‘இதுபோன்ற சம்பவங்களை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாணவா்கள் மிகவும் கடினமான சூழல்நிலையில் உள்ளனா். இந்த வயதில் அவா்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவா்கள். இதுபோன்று நிகழ்வதைத் தடுக்க வேண்டும்’ என்றாா்.

மற்றொரு மாணவரின் பெற்றோா் கூறுகையில், ‘மாணவா்களுக்கான பள்ளி சூழல் மிகவும் கடினமாக மாறி வருகிறது. இந்த நேரத்தில் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் ஆதரவாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் 4 ஆசிரியா்கள் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனா். இந்த விவகாரத்தில் நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும்’ என்றாா்.

தவறு செய்யும் நேரங்களில் மாணவா்களைக் கண்டிப்பது தேவையானது. தனிப்பட்ட வெறுப்பு மற்றும் தொடா்ச்சியாக திட்டுவது மாணவா்களை துன்புறுத்தும் செயல் என போராட்டத்தில் பங்கேற்ற பெற்றோா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com