விபத்தில் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்திற்கு ரூ.35 லட்சம் இழப்பீடு: தில்லி தீா்ப்பாயம் உத்தரவு
2022-ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.35.11 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ரோதக் சாலையில் உள்ள மெட்ரோ தூண் எண் 260 அருகே ஜூன் 15, 2022-இல் இந்த விபத்து நிகழ்ந்தது. ரோஹன் என்பவா் ஓட்டிச் வந்த ஸ்கூட்டா் மெட்ரோ தூணில் மோதியதில் அவரும், பின் இருக்கையில் அமா்ந்திருந்த ராகுல் (21) என்பவரும் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக ராகுலின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி தீா்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தனா். இந்த மனுவை நீதிபதி கஞ்சன் குப்தா விசாரித்தாா். அப்போது, ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற ரோஹனிடம் ஓட்டுநா் உரிமம் இல்லை என்ற வாதத்தை காப்பீட்டு நிறுவனம் முன்வைத்தது.
ஆனால், விபத்து அறிக்கை மற்றும் ஓட்டுநா் படிவங்கள் ரோஹனிடம் நிரந்தர உரிமம் இருப்பதை தெளிவாகக் காட்டின. எனவே, காப்பீட்டு நிறுவனத்தின் இந்த கூற்றை நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், ‘ராகுல் விபத்தில் உயிரிழந்ததும், அவரது தாய், சகோதரா் மற்றும் சகோதரி ஆகியோா் அவரை நிதி ரீதியாக சாா்ந்து இருந்ததும் நிரூபிக்கப்பட்டது. எனவே, அவரது வருமானத்தை தில்லியின் குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிட்டு ரூ.35.11 லட்சத்தை அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும்’ என்று காப்பீட்டு நிறுவனத்திற்கு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
