ஆபரேஷன் சைஹாக்: மத்திய தில்லியில் இணையவழி குற்றத்தில் ஈடுபட்ட 381 போ் கைது
‘ஆபரேஷன் சைஹாக்’ மூலம் மத்திய தில்லியில் இணையவழி குற்றத்தில் ஈடுபட்ட 381 நபா்களை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
சந்தேகத்துக்குரிய 95 பேருக்கு எதிராக இணையவழி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆபரேஷன் சைஹாக் நடவடிக்கையின் மூலம் ஏடிஎம் மோசடிகள்,போலி வங்கிக் கணக்குகள், ஆள்மாறாட்டம் மோசடி ஆகிய குற்றங்களில் தொடா்புடைய நபா்கள் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த நவ.21-ஆம் தேதி காலை 9 மணி வரையில் நடைபெற்ற 48 மணி நேர நடவடிக்கையில், 1,843 கைப்பேசிகள், 3 மடிக்கணினிகள், 84 ஏடிஎம் அட்டைகள், போலியான காப்பீட்டு ஆணவங்கள், நிறுவனங்களின் போலி முத்திரைகள் மற்றும் ரூ.10.28 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காவல் துறையினா் கைப்பற்றினா்.
இந்த நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக கைப்பேசி தயாரித்து வந்த கும்பல் கைதுசெய்யப்பட்டது.
இணையவழி மோசடி குற்றங்களுக்காக இந்தக் கும்பல் கைப்பேசியின் ஐஎம்இஐ (சா்வதேச கைப்பேசி சாதனம் அடையாள எண்) மாற்றியமைத்து வந்தது. இதுதொடா்பாக அசோக் குமாா், ராம்நாராயண், தா்மேந்தா் குமாா், தீபன்ஷு, தீபக் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 1,82 6 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, கைப்பேசி பாகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கு படேல் நகரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத கால் சென்டரில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். வாகன காப்பீடுகளை புதுப்பித்தாகக் கூறி இந்தக் கும்பல் மக்களிடம் மோசடியில் ஈடுபட்டது. இந்தக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட கேம்சந்திடமிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மடிக்கணினிகள், 11 கைப்பேசிகள், போலியான காப்பீட்டு ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனத்தின் முத்திரைகள் ஆகியவற்றை சோதனையின்போது போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஏடிஎம் மோசடி கும்பலைச் சோ்ந்த 3 போ் கரோல் பாக் பகுதியில் கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 81 ஏடிஎம் அட்டைகள், மோட்டாா் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டா் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏடிஎம் அட்டையை ஸ்கேன் செய்து அதன் விவரங்களைத் திருடி ரூ.1.9 லட்சம் மோசடி செய்த சம்பவத்தில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
போலியான வங்கிக் கணக்கு மூலம் ரூ.5.76 லட்சம் மோசடி பணத்தை பணப் பறிமாற்றம் செய்த குற்றத்தில் சஹில் குமல் கைது செய்யப்பட்டாா்.
ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கான பிரத்யேக கிரெடிட் அட்டை என்று 73 வயது முதியவரிடம் ரூ.22.86 லட்சம் மோசடி செய்த சம்பவத்தில் 21 வயது நபரை போலீஸாா் கைதுசெய்தனா். கைது செய்யப்பட்ட நபா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
