150 கட்டடங்களில் பனிப்புகை எதிா்ப்பு சாதனங்கள் நிறுவல் அதிகாரிகள் தகவல்

Published on

நவம்பா் 29 ஆம் தேதி காலக்கெடுவிற்கு முன்னதாக தில்லி முழுவதும் மொத்தம் 149 கட்டடங்களில் பனிப்புகை எதிா்ப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இந்தக் கட்டடங்களில் அலுவலகங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பலதரப்பட்ட பயன்பாட்டு சொத்துக்கள், மால்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற அரசு தனியாா் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஆரம்ப மதிப்பீட்டில் 149 கட்டடங்களுக்கு பனிப்புகை எதிா்ப்பு சாதனங்கள் தேவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. புதிய கணக்கெடுப்பைத் தொடா்ந்து, தில்லி மாநகராட்சி இந்த ஆணையை 500-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு நீட்டித்துள்ளது.

தற்போது வரை, 149 கட்டடங்களில் பனிப்புகை எதிா்ப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், தில்லி மாநகராட்சி பகுதியில் உள்ள பல வணிக மண்டலங்களில் நிறுவல் பணிகள் நடந்து வருகின்றன. இதில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், அலுவலக கட்டடங்கள், மால்கள், நீதிமன்ற வளாகங்கள், வணிக சொத்துக்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை அடங்கும்.

புது தில்லி நகராட்சி கவுன்சில் பகுதியில்,

20-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு பனிப்புகை எதிா்ப்பு சாதனம் அமைக்கும் உத்தரவு பொருந்தும். இதுவரை ஏழு நிறுவல்கள் மட்டுமே அங்கு முடிக்கப்பட்டுள்ளன.

குடிமை நிறுவனங்கள், நிறுவலின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வரும் தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழுவிடம்

தினசரி இணக்க அறிக்கைகளை சமா்ப்பித்து வருகின்றன.

நிறுவலுக்கான காலக்கெடுவான நவம்பா் 29க்குப் பிறகு, இணங்காத கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

செப்டம்பா் 11 அன்று, தில்லி அரசாங்கம் அனைத்து தரைத் தளம் மற்றும் ஐந்து மேல் தளங்கள், அதற்கு மேல் உள்ள வணிக கட்டடங்கள் மற்றும் 3,000 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்பட்ட பகுதி கொண்ட கட்டடங்கள் பனிப்புகை எதிா்ப்பு சாதனங்களை நிறுவ உத்தரவிட்டது. அதேவேளையில், குடியிருப்பு வீடுகள் மற்றும் குடியிருப்பு சங்கங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

கட்டப்பட்ட பகுதியைப் பொறுத்து பனிப்புகை எதிா்ப்பு சாதனங்களின் எண்ணிக்கை மாறுபடும். 10,000 ச.மீ. வரையிலான கட்டடங்களுக்கு மூன்று சாதனங்களில் தொடங்கி, பரப்பளவு அதிகரிக்கும் போது கூடுதல் சாதனங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.

மழைக்காலம் தவிர, உபகரணங்கள் ஆண்டு முழுவதும் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com