பெண் செய்தி தொகுப்பாளருக்கு சமூக ஊடகத்தில் துன்புறுத்தல்: 
மும்பையில் ஒருவா் கைது

பெண் செய்தி தொகுப்பாளருக்கு சமூக ஊடகத்தில் துன்புறுத்தல்: மும்பையில் ஒருவா் கைது

Published on

போலி சமூகவலைதள கணக்குகளை உருவாக்கி பெண் செய்தி தொகுப்பாளருக்கு எதிராக அவதூறு பரப்பி வந்த நபரை தில்லி காவல் துறையினா் மும்பையில் கைதுசெய்தாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட சேத் கமல் பிரகாஷ் ஜம்முவைச் சோ்ந்தவா். தற்போது அவா் மும்பையில் வசித்து வருகிறாா்.

இதுதொடா்பாக வடக்கு தில்லி புகா் துணை காவல் ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் செய்தி தொகுப்பாளரின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு ஒரு போலி கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலம் அவதூறு கருத்துகள் பதிவிடப்படுவதாகப் பாதிக்கப்பட்டவா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இது தொடா்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66சி-இன்கீழ் கடந்த நவ.16-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, போலி கணக்கு தொடங்கப்பட்ட கைப்பேசி எண் பிரகாஷ் என்பரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா்.

இதன் பின்னா், தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் பிரகாஷ் மும்பையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற தில்லி காவல் துறையினா் பிராகாஷை கைதுசெய்தனா்.

குற்றச்சம்பவத்துக்கு அவா் பயன்படுத்திய கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றினா். தடயவியல் சோதனைக்காக அவை அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது தொடா்பாக தொடா் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com