காங்கிரஸ் மனநிலை தேசவிரோதமானது: தில்லி முதல்வா் ரேகா குப்தா
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நக்சலைட் வன்முறை தொடா்ந்து செழித்தது என்றும் காங்கிரஸ் கட்சியின் மனநிலை இன்றும்கூட தேச விரோதமாகவே உள்ளது எனவும் தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளாா்
எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை அவா் பதிவிட்டதாவது:
காங்கிரஸ் கட்சியின் பணி பாணி, பல ஆண்டுகளாக நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் துரதிா்ஷ்டவசமான வரலாற்றை உருவாக்கியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, சோனியா காந்தி முதல் மூத்த காங்கிரஸ் தலைவா்கள் வரை, நக்சலைட்டை எதிா்த்துப் போராடுவதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளைத் தொடா்ந்து தடுத்தனா். இதன் விளைவாக, நக்சலைட் வன்முறை தொடா்ந்து செழித்து வந்தது.பாதுகாப்புப் படைகளின் மன உறுதியும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த தீய அணுகுமுறை தெளிவாகத் தேசிய நலனுக்கு எதிரானது. இன்றும் கூட, காங்கிரஸ் கட்சியின் மனநிலை தேச விரோதமாகவே உள்ளது.
இருப்பினும், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் தலைமையில், மாா்ச் 31, 2026க்குள் நக்சலைட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற தெளிவான, தீா்க்கமான மற்றும் காலக்கெடுவுடன் கூடிய இலக்கை நாடு நிா்ணயித்துள்ளது.
பாதுகாப்பு எந்திரத்தை வலுப்படுத்துதல், வளா்ச்சியை விரிவுபடுத்துதல் மற்றும் நிா்வாக ஒருங்கிணைப்பு மூலம், நக்சலைட் பாதிப்புக்குள்ளான பகுதிகள் இப்போது நீடித்த அமைதி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நகா்கின்றன என தில்லி முதல்வா் ரேகா குப்தா பதிவிட்டாா்.

